Wednesday, March 31, 2010

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் குறிப்பிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூபாய் 30 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்' என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி 2006 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு உற்பத்தியை தொடங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் கொள்கையின் கீழ் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, பூதலூர், மதுக்கூர், ஒரத்தநாடு , பாபநாசம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருப்பணந்தாள், திருவையாறு, திருவோணம் ஆகிய யூனியன் பகுதிகள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் ரூபாய் 25 லட்சம் வரை இயந்திர தளவாடங்களில் முதலீடு செய்துள்ள நுண் தொழில்களுக்கு இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியம், உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து மூன்று ஆண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியம் ஆறு ஆண்டுக்கு கணக்கிடப்பட்ட மதிப்புக்கூட்டு வரிக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பீட்டில் 100 சதவீதம் மானியம், பின்தங்கிய ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்திற்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் ஆகியவை வழங்கப்படும்.

பின்தங்கிய ஒன்றிய பகுதிகளில் தொடங்கப்படும் நுண் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், மாவட்டத்தில் உள்ள 14 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும் தொடங்கப்படும் விவசாயம் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தப்படும் தொழில்களுக்கும் இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அதிகபட்சம் ரூபாய் 30 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் 25 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத வேலை வாய்ப்பு பெருக்க மானியமாக ரூபாய் ஐந்து லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூபாய் மூன்று லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறன் படைத்தோர் மற்றும் திருநங்கையரால் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத கூடுதல் முதலீட்டு மானியம், ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் வழங்கப்படும். உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து மூன்றாண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியமும், பிற்படுத்தப்பட்ட ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்துக்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீத மானியமும் வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியிலும் அமைக்கப்படும் மின் மற்றும் மின்னனுப்பொருட்கள் தோல் மற்றும் தோல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் மருந்து பொருட்கள், சூரிய சக்தி பயன்பாட்டு கருவிகள், ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைக்ள், மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகள், விளையாட்டு கருவிகள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு ஆகிய சிறப்பு வகை உற்பத்தி இனங்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு தகுதியான இயந்திரங்கள், தளவாடங்களின் மதிப்பில் 15 சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் 30 லட்சத்துக்கு மிகாமல் மானியமாக வழங்கப்படும்.இவைகள் தவிர புதிதாக வாங்கப்படும் ஜெனரேட்டர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மான்யம் வழங்கப்படும். கூடுதல் விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மைய மேலாளர், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர். தொலைபேசி எண் 255318 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தங்கப்பா


உறவுகளில் தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……


உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

வாழ்த்துக்க‌ளோடு,
தங்கப்பா...

Tuesday, March 30, 2010

BUS....MISS.... FIND

ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினம்

உலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.



நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும். இந்த முட்டாள்கள் தினம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. எனவே, இந்த தினம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆய்வு செய்யாமல், இந்த தினம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.


இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். தாய்க்கு போன்செய்து அவர்களின் ஒரேமகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும் . இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்;






நபி [ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராகதிகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை. ஹெர்குலிஸ் மன்னனிடம் [அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத] அபூசுப்யான்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;


ஹெர்குலிஸ்; அவர் [நபிஸல்] இவ்வாறு[தூதரென்று] வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?


'அபூ சுப்யான்;இல்லை.[ஹதீஸ் சுருக்கம்] நூல்;புஹாரி,எண் ;7






முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?


'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.நூல்;புஹாரி


வியாபாரத்திலும் பொய் கூடாது;


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"நூல்;புஹாரி






வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா?எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய சகாபாக்கள்;தபுக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களில் மூவர் தவிர மற்றவர்கள் சாக்குபோக்கு சொன்னவர்கள் மன்னிக்கப்பட, பொய் சொல்லவிரும்பாத கஅப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால்[ரலி], முராரா[ரலி] ஆகியோர் பொய்யுரைக்க விரும்பாததால், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது;அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார் (என் தந்தை) கஅப் இப்னு மாலிக்(ரலி) 'தபூக்' போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன்.'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள்.நூல்;புஹாரி,எண் 4673






மற்றொரு ஹதீஸில்;அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான். 'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.' (திருக்குர்ஆன் 09:117-119)நூல்; புஹாரி, எண் 4678






கஅப் இப்னு மாலிக்[ரலி] உள்ளிட்ட மூவர் பொய் சொல்லி அல்லாஹ்வின் தூதரிடம் தப்பித்திருக்கமுடியும், ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்கள் என்றால், சகாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?பொய்யர்களுக்கு தண்டனை;


ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி[ஸல்]அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது . பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.[ஹதீஸ் சுருக்கம்]நூல்;புஹாரி,


என்ன சகோதரர்களே! இம்மை/ மறுமையை பாழாக்கும் பெய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்! --


3/27/2010 09:35:00 PM அன்று முகவை எக்ஸ்பிரஸ். இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டது

புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி (New Online Dictionary)

புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி


சொற்களுக்குப் பொருள் கூறுதல், அவற்றை உச்சரித்துக் காட்டுதல், அச்சொற்களுக்கு இணையான பொருள் உள்ள சொற்களை எடுத்துக்காட்டல் எனப் பல வகைகளில் டிக்ஷனரிகள் புழக்கத்தில் உள்ளன. சில இணையத்திலும் உள்ளன. ஆனால் ஒரு சொல்லை அதன் பொருள் குறித்துப் படிப்பதனால் புரிந்து கொள்ளுதலைக் காட்டிலும், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் சூழ்நிலை, தொடர்புடைய சொற்களுடன் புரிந்து கொள்ளுதல், அச்சொல்லை மனதில் பதியவைக்கும். இந்த நோக்குடன் இணையத்தில் ஒரு டிக்ஷனரி கிடைக்கிறது. இதன் பெயர் வேர்ட் நிக் (Wordnik) மேலே கூறப்பட்டவற்றுடன், அந்த சொற்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் உள்ள இடங்கள், அவற்றின் பொருள், தொடர்பான படங்கள், போட்டோக்கள், ஒன்றுக்குப் பலவாக விளக்கங்கள், பயன்படுத்துவது எப்படி என்ற எடுத்துக்காட்டுகள், தொடர்புள்ள மற்ற சொற்கள், சொற்களின் மூலக்கூறுகள் என அனைத்தையும் இந்த டிக்ஷனரி தருகிறது. இவற்றுடன் இன்றைய சொல் என்று தினம் ஒரு சொல்லை விளக்கத்துடன் காட்டுகிறது. “எங்கள் இலக்கு ஆங்கில மொழியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் அவை சார்ந்த அனைத்தையும் தருவதாகும். அத்துடன் சொற்கள் குறித்து அதனைப் படிப்பவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று காட்டுவதும் ஆகும் என இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். ஒரு சொல்லின் அதே பொருளைத் தரும் சொற்களை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய சொற்களையும் இந்த டிக்ஷனரி தருகிறது. எடுத்துக்காட்டாக Cheeseburger, milkshake மற்றும் doughnut ஆகியவை ஒரே பொருளைக் குறிப்பவை அல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இது போன்ற தொடர்புடைய சொற்களும் இந்த டிக்ஷனரியில் கிடைக்கின்றன.


ஒரு சொல் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்று காட்டும் வேளையில், உங்கள் உச்சரிப்பினையும் பதிந்து கொள்ள வழி தரப்பட்டுள்ளது. இதன் பன்முகத் தன்மை கிராஸ் வேர்ட் மற்றும் ஸ்க்ராபிள் போன்ற புதிர் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களை ஈர்க்கிறது. இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்களில் ஐரோப்பியர்கள் 11 பேருடன் குமணன் ராஜ மாணிக்கம் என்ற தமிழரும் உள்ளார் என்பது இதன் சிறப்பு.


இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. இந்த டிக்ஷனரியைப் பயன்படுத்தவும், சொற்கள் சார்ந்த உங்கள் கருத்துக்களைப் பதியவும், நீங்கள் எப்படி இதற்கு உதவலாம் என்று கூறவும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.wordnik. com

தங்கப்பா


இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்

இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல்

திங்கள்கிழமை, மார்ச் 29, 2010, 9:47[IST]

டெல்லி: இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு ​(என்.சி.ஏ.இ.ஆர்)​ நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்,​​ மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரம்:

10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.​ 550க்கும் குறைவாகவே உள்ளது.

2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ​முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.

நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.​ தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.​ முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.