புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி
சொற்களுக்குப் பொருள் கூறுதல், அவற்றை உச்சரித்துக் காட்டுதல், அச்சொற்களுக்கு இணையான பொருள் உள்ள சொற்களை எடுத்துக்காட்டல் எனப் பல வகைகளில் டிக்ஷனரிகள் புழக்கத்தில் உள்ளன. சில இணையத்திலும் உள்ளன. ஆனால் ஒரு சொல்லை அதன் பொருள் குறித்துப் படிப்பதனால் புரிந்து கொள்ளுதலைக் காட்டிலும், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் சூழ்நிலை, தொடர்புடைய சொற்களுடன் புரிந்து கொள்ளுதல், அச்சொல்லை மனதில் பதியவைக்கும். இந்த நோக்குடன் இணையத்தில் ஒரு டிக்ஷனரி கிடைக்கிறது. இதன் பெயர் வேர்ட் நிக் (Wordnik) மேலே கூறப்பட்டவற்றுடன், அந்த சொற்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் உள்ள இடங்கள், அவற்றின் பொருள், தொடர்பான படங்கள், போட்டோக்கள், ஒன்றுக்குப் பலவாக விளக்கங்கள், பயன்படுத்துவது எப்படி என்ற எடுத்துக்காட்டுகள், தொடர்புள்ள மற்ற சொற்கள், சொற்களின் மூலக்கூறுகள் என அனைத்தையும் இந்த டிக்ஷனரி தருகிறது. இவற்றுடன் இன்றைய சொல் என்று தினம் ஒரு சொல்லை விளக்கத்துடன் காட்டுகிறது. “எங்கள் இலக்கு ஆங்கில மொழியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் அவை சார்ந்த அனைத்தையும் தருவதாகும். அத்துடன் சொற்கள் குறித்து அதனைப் படிப்பவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று காட்டுவதும் ஆகும் என இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். ஒரு சொல்லின் அதே பொருளைத் தரும் சொற்களை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய சொற்களையும் இந்த டிக்ஷனரி தருகிறது. எடுத்துக்காட்டாக Cheeseburger, milkshake மற்றும் doughnut ஆகியவை ஒரே பொருளைக் குறிப்பவை அல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இது போன்ற தொடர்புடைய சொற்களும் இந்த டிக்ஷனரியில் கிடைக்கின்றன.
ஒரு சொல் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்று காட்டும் வேளையில், உங்கள் உச்சரிப்பினையும் பதிந்து கொள்ள வழி தரப்பட்டுள்ளது. இதன் பன்முகத் தன்மை கிராஸ் வேர்ட் மற்றும் ஸ்க்ராபிள் போன்ற புதிர் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களை ஈர்க்கிறது. இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்களில் ஐரோப்பியர்கள் 11 பேருடன் குமணன் ராஜ மாணிக்கம் என்ற தமிழரும் உள்ளார் என்பது இதன் சிறப்பு.
இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. இந்த டிக்ஷனரியைப் பயன்படுத்தவும், சொற்கள் சார்ந்த உங்கள் கருத்துக்களைப் பதியவும், நீங்கள் எப்படி இதற்கு உதவலாம் என்று கூறவும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.wordnik. com
தங்கப்பா
No comments:
Post a Comment