Sunday, May 9, 2010

வெற்றிக்குக் காரணங்கள்.....

வெற்றிக்குக் காரணங்கள்.....

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

'பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!!
 
thanks to opjameen.blogspot.com

மானாட மயிலாட (அடுத்தவன் பொண்டாட்டி கூட கெமிஸ்ட்ரி)


ஞாயிறன்று இரவு 8 மணியானால், சின்னத்தம்பி படத்தில் பிரபு பாட்டைக் கேட்க ஊரே திரண்டு ஓடுவது போல, அத்தனை பேரும் வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர். குறிப்பாக 5 முதல் 15 வயதுள்ள வாண்டுகள் அலறியடித்துக் கொண்டு டிவி பொட்டி முன் தவம் இருப்பதைக் கண்டு மண்டை காய்ந்தேன்.. காரணம் கண்டுபிடித்த போது....அது கலைஞர் டிவியில் வெளியாகும் மானாட மயிலாட நடன (?) நிகழ்ச்சிக்கு என தெரிய வந்தது. (இது படு லோக்கலான நிகழ்ச்சி என்பதால் இதற்கு மேல் நானும் லோக்கலாக தொடர்கிறேன்.. மன்னிக்கவும்). கலைஞர் தனிப்பட்ட முறையில வச்ச பேரு, அவரு கொடுத்த ஐடியாவ அடிப்படையாக வச்சிகிட்டு நடத்துற நிகழ்ச்சின்னு சொன்னாங்க.


கடந்த சில வாரங்களா மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்தேன். நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதே, "தொழில்"மேதை கலா, "கற்பூ"ர நாயகி குச்சிபு, எதை எதையோ இன்ஷூரன்ஸ் செய்து புரட்சி செய்த ரம்பா மேம் (அப்பிடித்தான் டான்ஸ் ஆடுறவங்க கூப்புடுறாங்க) குரூப்பா டான்ஸ் ஆடி கலக்குறாங்க. அவங்கள் போட்டிருக்கும் ஆடையே பல ஜாடைகள் சொல்வது போல் இருப்பதை வைத்தே நிகழ்ச்சி எந்தளவு களை கட்டும் என்பதை யூகிக்க முடிந்தது. அந்த ஒருவாரம் 2.30 மணி நேரம் நிகழ்ச்சி பார்ப்பதற்குள் கண்ணைக் கட்டி விட்டது.

அதற்கு அடுத்த வாரம் நிகழ்ச்சியில் நடுவர்கள் அனைவரும் மிகவும் மங்களகரமாக பட்டு சேலையில் வந்தார்கள். நானும் ஏதோ கலைஞர் திட்டியிருப்பார், அதனால் திருந்தி விட்டார்கள் என்ற நப்பாசையில் "செலிபிரேசன் ரவுண்ட்" பார்த்தேன். அங்கே நடனமாடும் ஜோடிகளை "வாடா! நல்லா பண்ணிருக்கடா!!" என்று பலத்த மரியாதையுடன் நடுவர்கள் அழைக்கின்றனர். குறிப்பாக கலா, "டேய் மணி, ஐ லவ் யூடா... எனக் கூற, ரம்பா ஒரு படி

மேலே போய் பறக்கும் முத்தங்களை அனாயாசமாக அள்ளி விடுகிறார். ஒரு ஜோடி சூப்பராக ஆடி செம கிழி கிழித்தனர் (இப்படித்தான் நடுவர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்). உடனே அக்கா குஷ்பு எழுந்து போய், இறுக்கமாக கட்ட்டிப்ப்ப் பிடித்த்த்து (இதில் ஆண், பெண் பாரபட்சமே கிடையாது) பாராட்டுகிறார். அதிலும் குறிப்பாக பாலா -பிரியதர்ஷினி என்ற ஜோடி ஆடி முடித்ததும் (இவர்கள் தான் இறுதிப்போட்டியில் வென்று மேடையில் கதறி அழுது எல்லாரையும் கட்டிப் பிடித்தார்கள்) கண்டபடி ஆடி முடிந்ததும் "ரெண்டு பேருக்கும் நல்ல கெமிஸ்டிரி இருக்கு! இன்னும் டெவலப்(யாரை வச்சு???) பண்ணனும்" என்று அறிவுரை கூறுகின்றனர் மூன்று பேரும். பிரியதர்ஷினி இதற்கு நன்றி தெரிவித்து "அடுத்த முறை பின்றேன் பாருங்கக்கா" என்று கூறியதோடு, இதற்கு அவருடைய கணவர் தந்த ஊக்கமும்(?), முயற்சியும் தான் காரணம் என்று தெரிவித்தார். நானும் அந்த தியாகியின் திருவுருவத்தை டிவியில் காட்டுவார்கள் என்று காத்திருந்து கடைசியில் ஏமாந்து போனேன்.



இன்னொரு ஜோடி (சாய்பிரசாந்த் -ஸ்வேதா என்று நினைக்கிறேன்). அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் 8 வயது மகன் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்துள்ளனர். இந்த ஜோடி ஆடி முடித்ததும் "என்னாச்சி உங்களுக்கு, உங்களுக்குள்ள ஒரு ஃப்யர் இல்லையே, விலகி விலகியே ஆடுறீங்க. கெமிஸ்ட்ரீ எங்க போச்சி....அடுத்த முறை செம கெமிஸ்ட்ரியோட ஆடணும்" என ரம்பாக்கா அறிவுறுத்தினார். (அடுத்தவன் பொண்டாட்டியோட கெமிஸ்ட்ரிய வொர்க் அவுட் பண்ணுங்கடா... இந்திய பொருளாதாரத்துல போதியளவு முன்னேற்றம் கெடைக்கும்).

அதே வார நிகழ்ச்சியில் நடனமாடும் ஒரு ஆணிடம் (கார்த்திக் என்று நினைக்கிறேன்) ரம்பா அறிவை தூண்டும் விதமாக "எந்த மாதிரி பொண்ணு உனக்கு பொண்டாட்டியா வரணும்?" ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் சளைக்காமல் "உங்க மூணு பேர் மாதிரி வேணும்"னு மூணு பேரையும் கரெக்ட் பண்ணும் விதமா ஒரு பிட்டை போட்டார். அந்த பதிலுக்கு அவரளித்த விளக்கம் விரசத்தின் உச்சம். அழகுல குஷ்பு மாதிரியும் கவர்ச்சில ரம்பா மாதிரியும் ஆளுமைல(?) கலா மாதிரியும் இருக்கணும்னு ஒரு புது இலக்கணம் சொன்னார்.


அதற்கு அடுத்த வாரம் காதல் ரொமாண்டிக் வாரமாம்..அந்த நிகழ்ச்சியில் ஒரு ஜோடி "ருக்குமணி! ருக்குமணி! என்ன சத்தம் இந்த நேரம்!" என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் ஆபாச அசைவுகளுக்கு துவக்கவுரை எழுதி கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு குடிசை போன்ற செட்டுக்குள் சென்று விட்டு துணி மணிகளை வெளியே விட்டெறிந்தார்கள். துணிகளை வெளியே எறிந்தவுடன் குடிசையை "சும்மா! அதிருதுல்ல"னு

அதிர வைத்து முடிவுரை எழுதினார்கள்.


இதே நடனம் தெருவோரத்தில் மேடையிட்டு ஆடினால் "ரெக்கார்டு டான்ஸ்" என்று நமது காவல் துறை தமது கடமையை செய்யும். ஆனால் இந்த நடனத்திற்கு நடுவர்கள் "வாட் எ இன்னோவேட்டிவ் ஐடியா!" என்று புகழுரைத்து, அந்த ஜோடிக்கு பெஸ் பெர்பார்மர் விருது கொடுத்து அதிர்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றார்கள். இன்னும் கொஞ்சம் விட்டால் முதலிரவு ரவுண்ட் வைத்து, ரவுண்டு கட்டி கலாய்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை (பொது நாகரிகம் கருதி இங்கு கெட்ட வார்த்தைகளை நான் பயன்படுத்த விரும்பவில்லை).

பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் "மிட் நைட் மசாலா" என்று நடுநிசியில் இந்த மாதிரியான ஆபாச பாடல்களை ஒளிபரப்புவார்கள். அதே மாதிரி "மானாட மயிலாடா" நிகழ்ச்சியை "நடுநிசி நர்த்தனங்கள்" என்ற பெயரில் ஒளிபரப்பினால் சிறுவர்கள் மனதில்

கேடுகெட்ட சமுதாய சீர்கேடு புகுவதை தடுக்கலாம்.


இது ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்பதாலும், கலைஞரின் இதயத்தில் 'டிஆர்பி' ரேட்டிங் வாங்கிய நிகழ்ச்சி என்பதாலும் அதிகம் விமர்சிக்கக் கூடாது... மீறி விமர்சித்தால் தமிலு தாய் மன்னிக்க மாட்டாள்!!
 
thanks to evano-oruvan.mywebdunia.com