Sunday, May 23, 2010

ஃபேஸ்புக்


இஸ்லாமாபாத்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான படங்கள் இடம் பெற்ற ஃபேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் ஒருவர், தனது தளத்தில், பேச்சுச் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் படங்களை அனுப்பி வைக்கலாம் என அழைப்பு விடுத்திருந்தார். இது பாகிஸ்தானில் பெரும் புயலைக் கிளப்பி விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இழிவுபடுத்தும் செயலை ஃபேஸ்புக் நிர்வாகம் அனுமதித்ததைக் கண்டித்து ஃபேஸ்புக்கை தடை செய்தது பாகிஸ்தான் அரசு. மேலும் யூடியூப் மற்றும் ட்விட்டர் தளங்களையும் அது தடை செய்தது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த பக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அதை உருவாக்கியவரே அப்பக்கத்தை நீக்கி விட்டதாகவும் அது கூறியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவதூறாக சித்தரிக்கும் இதுபோன்ற தகவல்கள் உள்ளிட்டவற்றை நீக்கினால் மட்டுமே தடை விலக்கப்படும் என பாகிஸ்தான் அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் ஃபேஸ்புக்கின் இந்த
அறிவிப்பு குறித்து அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த 2005ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு செய்தித் தாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறி ஒரு கார்ட்டூன் படத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களை கடும்கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து உலகின் பல பகுதிகளிலும் மோதல்கள் வெடித்தன. பாகிஸ்தானிலும் அது பெரிதாக வெடித்தது. பெருமளவில் அங்கு வன்முறைச் சம்பவங்களும் நடந்தன.

நன்றி :நிசார் அஹமது (PTM )