Wednesday, March 31, 2010

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் குறிப்பிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூபாய் 30 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்' என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி 2006 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு உற்பத்தியை தொடங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் கொள்கையின் கீழ் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, பூதலூர், மதுக்கூர், ஒரத்தநாடு , பாபநாசம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருப்பணந்தாள், திருவையாறு, திருவோணம் ஆகிய யூனியன் பகுதிகள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் ரூபாய் 25 லட்சம் வரை இயந்திர தளவாடங்களில் முதலீடு செய்துள்ள நுண் தொழில்களுக்கு இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியம், உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து மூன்று ஆண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியம் ஆறு ஆண்டுக்கு கணக்கிடப்பட்ட மதிப்புக்கூட்டு வரிக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பீட்டில் 100 சதவீதம் மானியம், பின்தங்கிய ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்திற்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் ஆகியவை வழங்கப்படும்.

பின்தங்கிய ஒன்றிய பகுதிகளில் தொடங்கப்படும் நுண் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், மாவட்டத்தில் உள்ள 14 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும் தொடங்கப்படும் விவசாயம் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தப்படும் தொழில்களுக்கும் இயந்திர தளவாடங்களில் செய்துள்ள முதலீட்டில் 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அதிகபட்சம் ரூபாய் 30 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் 25 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத வேலை வாய்ப்பு பெருக்க மானியமாக ரூபாய் ஐந்து லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூபாய் மூன்று லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறன் படைத்தோர் மற்றும் திருநங்கையரால் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு ஐந்து சதவீத கூடுதல் முதலீட்டு மானியம், ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் வழங்கப்படும். உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து மூன்றாண்டுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மானியமும், பிற்படுத்தப்பட்ட ஒன்றியங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இடத்துக்கான பத்திர மதிப்பு பதிவு கட்டணத்தில் 50 சதவீத மானியமும் வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த பகுதியிலும் அமைக்கப்படும் மின் மற்றும் மின்னனுப்பொருட்கள் தோல் மற்றும் தோல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் மருந்து பொருட்கள், சூரிய சக்தி பயன்பாட்டு கருவிகள், ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைக்ள், மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகள், விளையாட்டு கருவிகள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு ஆகிய சிறப்பு வகை உற்பத்தி இனங்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு தகுதியான இயந்திரங்கள், தளவாடங்களின் மதிப்பில் 15 சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் 30 லட்சத்துக்கு மிகாமல் மானியமாக வழங்கப்படும்.இவைகள் தவிர புதிதாக வாங்கப்படும் ஜெனரேட்டர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மான்யம் வழங்கப்படும். கூடுதல் விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மைய மேலாளர், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர். தொலைபேசி எண் 255318 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தங்கப்பா


No comments:

Post a Comment