Friday, March 5, 2010

பட்ஜெட் 2010-11 : அம்பானிகள் vs சாமானியர்

பட்ஜெட் 2010-11 : அம்பானிகள் vs சாமானியர்
திங்கள், 01 மார்ச் 2010 18:51 இந்நேரம்.காம் Articles

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் 2010 -2011ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. பெரிதாக எதிர்பார்க்கப் பட்ட இந்த நிதி நிலை அறிக்கை பற்றிய ஒரு சிறு அலசல் உங்கள் பார்வைக்காக இங்கு தரப் பட்டுள்ளது.
இந்த நிதி நிலை அறிக்கையில் சாமானிய மக்களை பாதிக்கப் போகும் ஒரு அம்சம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி உயர்த்தப் பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி 2.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உற்பத்தி வரி லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளது. இதன் விளைவாக உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக சரக்குகள் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப் பட்டுள்ளனர். ஆட்டோக்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டன. அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகள் முயற்சிக்கும். இதன் பாதிப்பைச் சந்திக்க இருப்பது அம்பானிகள் அல்ல சாதாரண குடிமக்களே.

பெட்ரோலியப் பொருட்களுக்கு வரிச் சலுகை தேவை இல்லை என்று இதற்கு காரணம் கூறுகிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக வரியை விலக்கியதாகவும் தற்போது கச்சா விலை குறைவால் அளிக்கப் பட்ட வரி விலக்கை ரத்து செய்து விட்டதாகவும், புதிதாக எந்த வரியும் விதிக்கப் படவில்லை என்றும் விளக்குகிறார் மாண்புமிகு நிதி அமைச்சர்.

சாதாரண மக்களைப் பாதிக்கக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் பெட்ரோலிய பொருட்களின் வரிகளை உயர்த்திய மத்திய நிதி அமைச்சர் வருமான வரிகளுக்கு மட்டும் சலுகைகளை அள்ளி இறைத்துள்ளார். பாவம் வரி கட்டுபவர்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள் போலும்.

இந்த ஆண்டின் வருமான வரியாக ரூ. 160000 முதல் ரூ. 500000 வரை 10 சதவீதமாகவும், ரூ. 500000 முதல் ரூ. 800000 வரை 20 சதவீதமாகவும், ரூ. 800000 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமாகவும் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். ஒரு பக்கம் அடிப்படைச் சம்பள உயர்வு, அக விலை படி உயர்வு போன்ற உயர்வுகளை அள்ளி இறைத்து விட்டு ரொம்ப கஷ்டப் படக் கூடாது என்று வரி சலுகைகள் வேறு. இதன் மூலம் ரூ. 26000 கோடி வருவாய் இழப்பை சந்திக்கத் துணிந்த அரசு சாதாரண குடிமக்களின் நிலையை உணர மறுத்தது ஏன்?

இந்த சலுகைகள் மூலம் ரூ. 500000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 20000, ரூ. 500000 மற்றும் அதற்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ. 50000 வரையிலும் வருமான வரி செலவு குறையும். சில வருடங்களுக்கு முன்பு 20 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை இருந்த வருமான வரி வீதங்கள் இன்று அதிக பட்சமாக 30 சதவீதமே இருப்பது குறிப்பிடத் தக்கது.

நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த சில மணி நேரங்களில் கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரத்து 424 கோடி அதிகரித்துள்ளது. அவரது தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1,987 கோடி உயர்ந்துள்ளது.

தொழில் அதிபர் பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ 1085 கோடியும், விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜிக்கு ரூ. 946 கோடியும், பாரதி ஏர்டெல் சுனில் மிட்டலுக்கு ரூ 535 கோடியும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் மீது அதிக வரி விதித்து பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி வருவாயை ஈடு செய்யாமல் விலைவாசி உயர்வுக்கு வித்திடும் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அதிகரித்து காங்கிரஸ் அரசு மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த பாமர வாக்காளர்களுக்கு பட்டை நாமம் சாத்தியுள்ளார் நிதி அமைச்சர்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சிக்கு பெரிய அளவில் தேர்தல் நிதியை அளித்து அதற்குப் பகரமாக வேறு வகையில் சாதித்துக் கொள்ளும் அம்பானிகளும், பிர்லாக்களும் இருக்கும் வரையில் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியாது.

மேலும் நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் குழுவில் ஐ.ஏ.எஸ் படித்த அதிகாரிகளை மட்டும் வைத்தால் போதாது ஏர் பிடிக்கும் ஒரு விவசாயியும் இடம் பெற்றால் ஒழிய அடித் தட்டு மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் ஒரு நிதி நிலை அறிக்கையை எந்த அரசாலும் தர இயலாது.

இது சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் கூறினார். இது சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டா அல்லது தனவந்தர்களை மேலும் தனவந்தர்களாக்கும் பட்ஜெட்டா என்பது இதை படித்த பின் உங்களுக்கே தெரிந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை

Thanks united muslim yahoo groups



__._,_.___

No comments:

Post a Comment