Wednesday, May 19, 2010

பேச்சு ஆங்கிலம் ( Spoken English )

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?

பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்:
 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.  

பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.

உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.

தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.

சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.


நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.

ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும்.

No comments:

Post a Comment