Monday, May 10, 2010

உமர் தம்பி.('தேனீ உமர்', 'யுனிகோட் உமர்')

மே 10,2010
கோவை மாநாட்டில் 'யுனிகோட்' உமருக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

தமிழ் இணையச் சூழலில் பரிச்சயமான பெயர், உமர் தம்பி. இணையத்தில் தமிழ் இதமாக வலம் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
இணையத்தில் 'தேனீ உமர்', 'யுனிகோட் உமர்' என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் அவரது தமிழ்க் கணினித் தொண்டை கெளரவிக்கும் வகையில், எதிர்வரும் கோவை மாநாட்டில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும், உயரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் தான் இன்றைய தீவிர தமிழ் இணையவாசிகளின் உள்ளங்களில் மிகுந்திருக்கிறது.
யார் இந்த உமர்?      கணினித் தமிழுக்கு அப்படி என்னதான் செய்தார் உமர்?
உமருக்கு தமிழ் வரலாற்றில் ஏன் அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் வலைத்தளங்களில் உலா வருகிறது?
இவைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

உமர் தம்பி (ஜுன் 15, 1953 - ஜூலை 12, 2006) தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. பெற்றோர் காலம் சென்ற அ.அப்துல் ஹமீது மற்றும் ரொக்கையா அம்மாள், மனைவி - பவுஜியா மற்றும் மூன்று ஆண் பிள்ளைகள் - மொய்னுதீன், முஹ்சீன், அப்துல் ஹமீது. உமருடன் பிறந்தது மூத்த சகோதரர் - அப்துல் காதர் மற்றும் மூன்று மூத்த சகோதரிகள். குடும்பத்தின் கடைசி பிள்ளையான உமர் தம்பி செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டுள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், உமரின் குடும்பம் நிறைய படித்த பாட்டதாரிகள் நிறைந்தது.
உமர் தம்பி அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டப் படிப்பு படித்தவர். இளங்கலை மட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் (Electronics) என்னும் மின்னணுவியலில் பட்டயப் (Diploma) படிப்பையும் முடித்தவர். 1983 ஆம் ஆண்டில் தமது சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்தார். மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் உமர். அந்தத் தேடலின் பயனாக, ஒருமுறை தாம் பயின்ற அதிராமபட்டினம் காதர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி ஊரிலிருப்போர் கேட்கும் விதத்தில் உரையாடல்களை ஒலிபரப்பி அன்றைய காலக்கட்டத்தில், அனைத்து அதிரைவாசிகளையும் வியப்பில் ஆழ்த்தினார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் மின்னணுச் சாதனங்களை பழுது நீக்கும் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். பதினேழு ஆண்டுகள் அமீரகத்தில் பணி செய்த உமர், 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார். அமீரகத்தில் இருந்த காலத்திலேயே தன் செந்த முயற்சியால் கணினி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தி நாளைடைவில் கணினித்துறையில் மிகச் சிறந்த வல்லுனராக தன்னை உயர்த்திக்கொண்டார். இளம் வயதிலிருந்து தம் தாய்மொழி தமிழ் மீது நல்ல பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார். உமர் மறைந்தது, 2006 ஆம் ஆண்டு ஜூலை 12. மண்ணில் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை பெருங்கொடையினை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், உமர்.
கணினித் தமிழுக்காக செய்த சேவைகள்...
கணினித் துறையில் பல்வேறு வேலைகளைத் திறம்படச் செய்து கொண்டிருந்த வேளையில். கணினியில் கன்னித் தமிழுக்கு அணி செய்யும் பணியையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உமருக்குள் எழுந்தது. அந்தப் பணியில் தாம் ஈடுபட்டது மட்டுமல்ல. நாளைய தலைமுறையும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தம்மை ஒத்தக் கருத்துடையவர்களையும் திரட்டி அவர்களுக்குரிய ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.
யுனிகோட் தமிழ் எனப்படும் ஒருங்குறித் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான 'தேனீ' இயங்கு எழுத்துருவை உமர் தம்பி அறிமுகம் செய்தார். ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களைச் சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன. WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது. மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும்.
தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு வலைத்தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் பெரும்பாலானோர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைத்தளம், வலைப்பதிவு செய்து வருகிறார்கள். தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.
உதாரணத்துக்குச் சில...

  1. AWC Phonetic Unicode Writer மற்றும் இதன் செயலியை இலவசமாக இணைய பயனார்களுக்கு தந்துள்ளார்.

  2. தமிழுக்காக Online RSS creator - can be used in offline as well

  3. எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி

  4. எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி

  5. ஒருங்குறி மாற்றி

  6. தேனீ ஒருங்குறி எழுத்துரு

  7. வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு

  8. வைகை இயங்கு எழுத்துரு

  9. தமிழா-இ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார். 
தமிழ்க் கணினி பயன்பாட்டாளர்களுக்கு பயன் தரும் வகையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் தமிழில் நிறைய கட்டுரைகள் தந்துள்ளார். உதாரணமாக...
1. எழுத்த பழகுவோம் HTML, (இன்றும் கணினி அறிவு இல்லாதவர்களுக்கும் புரியும்படி மிக எளிய தமிழில் அருமையான கட்டுரை தந்துள்ளார்.
2. யுனிகோடின் பன்முகங்கள்
3. யுனிகோடு - என் பார்வையில்

மற்றும் பல கட்டுரைகள் உமர்தம்பியின் வலைபூவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமர் தம்பியை பற்றிய கணினித் தமிழ் ஆர்வளர்களின் கருத்துக்களும், பாராட்டுக்களும் தான் இன்றும் அவரது தமிழ் கணிமைக்கான சேவைகளுக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. உதாரணமாக..
உமர் பற்றி தமிழ் கணினி அறிஞர் சுரதா யாழ்வாணன்...
"உண்மையில் தானியங்கி எழுத்துரு செய்வது சுலபம். ஆனால், உமர் செய்தது        அது அல்ல. தானியங்கி எழுத்துரு அமைக்கும்போது அந்த microsoft / weft செயலி ஒவ்வொருமுறையும் அது எந்த வலைத்தளத்திலிருந்து செயல்படவிருக்கிறது என கண்டிப்பாக கேட்கும்.உதாரணமாக திசைகள்.கொம் என கொடுத்திருந்தோமேயானால் அது தில்லை.கொம் என்ற தளத்திற்கு இயங்காது. இதை ஆரம்பத்தில் கவனித்த நான் முகவரிக்குப் பதிலாக http:// எனப் போட்டு அந்த ஆரம்பத்தில் வரும் அத்தனை முகவரிகளுக்கும் அந்த தானியங்கி எழுத்துரு இயங்கும் வண்ணம் முயற்சித்தேன். ஆனால் அது சரிவரவில்லை. இதே எண்ணம் உமர் மனதிலும் தோன்றி அதே http:// செயல்பாட்டை நிறுவி தேனீ எழுத்துருவை அனைத்து தளங்களிலும் அதாவது http://என/ ஆரம்பிக்கும் அத்தனை முகவரிகளுக்கும் செயல்படுமாறு அந்த செயலியை உடைத்து (hack) நடைமுறைப்படுத்தியிருந்தார். அவரது இந்த உத்தியைதான் நான் மிக வெகுவாக மெச்சி பாராட்டியிருந்தேன். அதற்கு அவர் தன்னடக்கமாக எனது தானியங்கி எழுத்துரு e-lesson பற்றி சிலாகித்து மேலதிகமாக பாராட்டியிருந்தார். இதே போல் இன்னுமொரு சம்பவம். எல்லோரும் அன்று தமிழுக்கு யூனிகோடுதான் சரியானவழி என முனைப்பாயிருந்தார்கள். ஆனால் அதை பலரும் பயன்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தவைக்க தயாராகவிருக்கவில்லை. கிடைக்கக்ககூடிய எழுத்துருவோ ஒன்றில் வர்த்தக நோக்கில் பணம் கட்டி வாங்கும் எழுத்துருவாகவிருந்தது அல்லது எழுத்து சீர்திருத்தமுறையில் அமைந்திருந்தது.
இந்த நிலமையில்தான் யூனிகோட்டை சரளமாக எல்லோரும் பாவிக்கும் வண்ணம் செய்வதற்காக தமிழில் இதற்கான எழுத்துரு தேவை என மடலாடற்குழுக்களில் வர்த்தக எழுத்துருக்களை தவிர்த்து யூனிகோட் எழுத்து தேவை என நான் தேடும்போது சில வாரங்களில் உடனடியாக தனது தேனீ எழுத்துருவை உருவாக்கி இலவசமாக தமிழ்க்கணனி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இன்று பல யூனிகோட் எழுத்துருக்கள் அரசு ஆதரவுடனும் தனிப்பட்ட பலரது சேவை நோக்கத்துடனும் வந்துவிட்டன. ஆனால் அன்று உமர் காலமறிந்து ஆபத்பாந்தவனாக வெளியிட்ட தேனீ எழுத்துரு இன்றுவரை நிற்கின்றது.அதே போல் அன்று அந்த வசதி உமர் தந்திருக்காவிடில், தமிழில் யுனிக்கோடின் பாய்ச்சல் சற்று தாமதப்பட்டிருக்கும் என்று சொன்னாலும் மிகையல்ல.
இன்னொரு எழுத்துருவாக்க அன்பர் தனது எழுத்துருவை யூனிகோட் முறைமைக்கு மாற்ற என்னிடம் தொடர்பு கொண்டபோது உமரைத்தான் நான் சுட்டிவிட்டிருந்தேன். பின்னர், உமரின் உதவியுடன் அது வைகை யூனிகோட் எழுத்துருவாகியது. அதுகூட இலவசமாகத்தான் வெளியாகியது. இதன் பின்னர் உள்ள உழைப்பு ஆர்வம் பயனாளிகளுக்கு ஒருபோதுமே தெரியவராது. ஆனால் இந்த உழைப்பு வீண்போகவில்லை என்பதை உமரின் பிரிவின் பின் அவருக்கு அஞ்சலி செலுத்திய வலைப்பதிவர்கள் நிருபித்திருக்கிறார்கள்.
இனி இந்த கணனி உழைப்பாளி திரும்ப வரப்போவதில்லை. ஆனால் இன்று உமர் உருவாக்கிய அத்தனை செயலிகளும் காலவோட்டத்தில் உபயோகமாகாமல் போகலாம். ஆனால் உமர் என்ற இந்த தமிழ்த் தொண்டனின் அந்த தமிழார்வ, கணனி உழைப்பு, சேவை அடுத்து வரும் தமிழ்க் கணனி ஆர்வலர்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்து அவர்களும் இதேபோல் வீச்சுடன் தமிழுக்கு சேவை செய்ய ஒரு உந்துதலாகவிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை." - சுரதா யாழ்வாணன்.
நன்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=12890
எத்தனையோ தமிழ் ஆர்வலர்கள் உமர் தம்பியின் மறைவுக்குப் பிறகு கருத்துக்களும் பாராட்டுக்களும் வெளியிட்டார்கள். இன்றும் இணையத்தில் ஆயிரக் கணக்கில் கொட்டிக்கிடக்கிறது. இணையத் தேடலில் உமர் தம்பி என்று தேடிப் பார்த்தால் இன்னும் நிறைய அறிந்துக்கொள்ளலாம்.உமரின் மறைவுக்குப் பிறகு அவரை பற்றி மற்ற கணினித் தமிழ் ஆர்வளர்களின் கருத்துக்களை எழில்நிலா வலைத்தளத்தில் காணலாம். http://ezilnila.com/archives/803
உமருக்கு அங்கீகாரம் ஏன்?
ஓரிருவரிகள் கொண்ட மென்பொருள் நிரலிகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் யுனிகோட் எழுத்துருக்களும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி எவ்வித பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தவர் உமர் தம்பி.
எந்த அரசாங்கத்தின் உதவியின்றி இணையத்தில் விரைவாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பல வகையான தமிழ் வலைப்பூ பதிவுகளுக்கும், தமிழ் கணினி தொழில் நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயன்பாட்டாளர்களாலும் தமிழ் இணைய அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. தன்னலமில்லாமல் தன் தாய்மொழி இவ்வுலகில் ஜீவிக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு தனக்கு ஏற்பட்ட புற்றுநோயையும் பொறுத்துக் கொண்டு தன் வாழ் நாள் இறுதி கட்டம் வரை இணையத் தமிழ் வளர்ச்சிக்காக ஒரு மவுனப் புரட்சி செய்து போராடிய உமர் தம்பி இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.
கணினியில் தமிழ் மொழி அதிவிரைவில் வளர்ச்சியடைவதற்கு உமர் தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. அதுபோல் உமரின் எழுத்துருக்கள், செயலிகள், கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுரைகள் அன்றும் இன்றும் தமிழ் இணையப் பயனார்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்பதை இணையத் தமிழ் ஆர்வலர்களின் பழைய, புதிய பதிவுகள் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.
உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றால் முதலில் மகிழ்ச்சி அடையப் போவது இணையத் தமிழ் மக்கள் தான். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால் அது தமிழை இணையத்தின் மூலம் பரப்பி வரும் இணையத் தமிழர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும், இன்னும் பல முன்னேற்றங்களை காணலாம், ஆங்கில ஆதிக்கத்தை முறியடித்து நம் தாய்மொழி தமிழால் கணினித் துறையில் அரிய பல சாதனைகளை படைக்கலாம்.உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டால், அது கணித் தமிழில் சாதனைப் படைக்க எந்த அரசாங்கத்தின் உதவியின்றி தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்துவரும், செய்ய துடிக்கும் எத்தனையோ உமர் தம்பிகளை இவ்வுலகம் காணும். தமிழ் இணையத்தில் தனக்கேன்று தனித்துவத்துடன் திகழும், மென்மேலும் வளர்ச்சியடையும்.

நம் தாய்மொழி தமிழ்ச் செம்மொழியாக மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் இவ்வுலகில் பல அங்கீகாரங்களை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.அரசு உதவியின்றி தம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் உமர் தம்பி போன்ற எண்ணற்ற தன்னார்வத் தமிழ் கணினி தொண்டர்களை கண்டறியப்பட வேண்டும், அவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். உமர் தம்பி பெயரில் விருதோ அல்லது கணினித் தமிழ் ஆராய்ச்சி குழுவுக்கு பெயரோ அல்லது தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறைக்கு உமரின் பெயரையோ சூட்டினால், அது அவருக்கு செய்யும் கெளரவமாக இருக்கும் என்பதில் தமிழ் கணினியாளர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.
இதோ மிக அருகில் இருக்கிறது, ஜூன் 23. இந்தத் தேதியில் கோவையில் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறவுள்ளது. ஆண்டு தொறும் தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் உத்தமம் அமைப்பு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய, தமிழக அரசுக்கு பரிந்துரைச் செய்ய வேண்டும். சாதி, மதம், கட்சி, இயக்கங்கள், கொள்கைகள் பாகுபாடின்றி இணையத்தில் தமிழுக்கு புத்துயிர் தந்த உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க, இணையவாசிகள் அனைவரும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தருமா? அந்த அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்பது இணைத் தமிழ் ஆர்வலர்களின் பலமான நம்பிக்கை! அப்படி ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால், பெருமையடையப் போவது உமர் தம்பியல்ல... இணையத் தமிழே!
உமர்  தம்பி குறித்த விக்கிப்பீடியா பக்கம்... http://www.ta.wikipedia.org/wiki/உமர்தம்பி
நன்றி: அதிரைகாரன், ஸதக்கத்துல்லாஹ்
நன்றி:  முஹமது சாதிக் (எமிரேட்ஸ் பேங்க் )

No comments:

Post a Comment