Saturday, April 17, 2010

ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே!

பாவலர் அறிவுமதி தொடர்கிறார்...




ஹாய் மதன் கேள்விபதில் பகுதியில் இது கேள்வி...

பாரதியார் காதலித்திருக்கிறாராமே?

இதற்கு மதனின் பதில்...


மனைவியோடு வாழ்வதற்கே நேரமில்லாத பாரதிக்குக் காதலியா? எல்லாம் பொய்.


இந்தப் பதிலைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். பாரதியார் தம் சுயசரிதையிலேயே தம் பிள்ளைப் பிராயத்துக் காதலைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறரர். அவரது வரிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான பதிலை மதனிடம் கூறி திருத்தி வெளிடுங்கள். ஒரு மகாகவியின் வரலாற்றில் பல இலட்சம் வாசகர்களுக்கு ஒரு பிழையைப் பதிவு செய்வது தவறு என்று மடல் எழுதி அனுப்பினேன்.


ஆனந்த விகடன் அந்தப் பிழையைத் திருத்த முன் வரவில்லை. அடுத்த வாரம் மதனுக்குத் தொலைபேசி செய்து "பதினோரு வயது பாரதி ஒன்பது வயது பெண்ணைக் காதலித்திருப்பதாக சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, தங்கள் தவறான பதிலுக்குத் திருத்தம் வெளியிடுங்கள். அதுதான் நாகரிகம்" என்றேன்.


"வயசுக்கு வராத பெண்ணை பாரதி காதலித்திருக்கிறானா?" இதுதான் மதன் என்னிடம் கேட்ட கேள்வி. மதன் கேள்வி பதில் ஆனந்த விகடனின் வியாபாரத்திற்கான ஒரு பகுதி. மதனின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை குறைதல் கூடாது என்பதற்காகவே ஒரு மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை மறைக்கத் துடிக்கிறது ஆனந்த விகடன்!


இந்த ஆனந்த விகடனில்தான் ஞாநி அறிந்தும் அறியாமலும் என்ற பாலியல் மருத்துவ அறிவியல் தொடரை எழுதுகிறார். இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து. நோயுற்ற பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் மருத்துவரிடம் போகவேண்டுமே தவிர விபச்சாரத் தரகனிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியமில்லை. ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது என்பதற்கு இதோ இந்தக் குறுங்கதையே எடுத்துக்காட்டு. 27.6.2007 ஆனந்த விகடனில் வந்தது.


"வா" என்றான் அவன்.


"ஊகூம்" என்றாள் அவள்.


"வா" என்றான் மீண்டும்.


"இல்ல" என்றாள்.


"வா" என்றான் திரும்பவும்.


"தப்பு" என்று முறைத்தாள்.

அதன் பிறகும் "வா" என்று இழுத்தான்,

"போடா" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.


‘வ’ பக்கத்துல ‘¡’ போட்டிருந்தா தான் ‘வா’ன்னு இழுக்கணும், இது 'வ' என்று பொறுமையாக அந்த சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்! ஒரு சிறுவனுக்கு ஒரு தமிழாசிரியை தமிழ் சொல்லிக் கொடுக்கும் காட்சியை வைத்தே இவ்வளவு வக்கிரமாக காம இச்சையைத் தூண்டி தமிழர்களிடம் காசு பார்க்கத் துடிக்கிற ஆனந்த விகடனா தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியை நடத்தும் காகிதப் பள்ளிக் கூடமாக விளங்கப்போகிறது. நம்புகிறீர்களா தமிழர்களே?

ஆனந்த விகடன் நமக்கு.. நம் தமிழர்களுக்கு ஏதேனும் செய்யுமென்று நம்புகிறீர்களா? இதோ 9.06.2007இல் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவைகளைப் படியுங்கள்.


"என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது"

“தெரிஞ்சதும் என்ன பண்ணினே?”

"கலாவை வேலைய விட்டு நிறுத்திட்டேன்".



"நம்மோட கள்ளத் தொடர்பு தெரிஞ்சுட்டதால். உன்னை வேலையைவிட்டு நிறுத்தப் போறா என் மனைவி!"

"கவலைப்படாதீங்க எஜமான். உங்களுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேன்!"



ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்து பண்டம் பாத்திரம் கழுவி, உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அறைகளைக் கூட்டிப் பெருக்கி - அதிலிருந்து வருகிற வருமானத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாக்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக அறிமுகப்படுத்துகிற ஆனந்த விகடனிலா எங்கள் பிள்ளைகள் பாலியல் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்?



தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களையெல்லாம் படியுங்கள் படியுங்கள் என்று போராடிப் படிக்க வைத்ததெல்லாம் இப்படி நீங்கள் எங்கள் தாய்மார்களைப் பற்றி கேவலமாக எழுவதைப் படிக்கத் தானா ஞாநி!



ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி ஓ போட வைக்கிற ஞாநியே! இப்படி சமூக பொறுப்பற்ற முறையில் பெண்களைக் கேவலப்படுத்தி பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போட்டு, படிக்கும் தமிழர்களின் காம இச்சையை வக்கிரமாகத் தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆனந்த விகடன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான பச்சை மன்னிக்கவும். நீல வியாபாரத் தந்திரமே உங்களின் இந்தப் பாலியல் அறிவியல் மருத்துவத் தொடர்.



"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."



இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?



தாங்கள் எழுதும் பாலியல் அறிவியல் கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்.. மருத்துவப் பட்டம் பெறாத தாங்கள் சொல்வதை நம்பி எப்படி தெளிவு பெறுவது? மருத்துவத் துறையின் அறநெறிகளுக்கும் மானுட அறநெறிகளுக்கும் இது மட்டும் விரோதமாகாதா? ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளும்.. ஞாநி போன்ற பத்திரிகையாளர்களும்.. திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களிடம் மட்டும்.. பாலியல் சார்ந்த காமத்தை வக்கிர உணர்ச்சியாக வைத்து வணிகம் செய்வதற்கான காரணம் என்ன?



ஒரே காரணம்தான்...


கணவனும் மனைவியும்.. தனித்துப் படுக்க ஒரு வீடு கிடைக்காத, ஓர் அறை கிடைக்காத குந்தக் குடிசையில்லாத.. புறம்போக்குகளாய்ப் பெரும்பகுதித் தமிழர்கள் வாழவேண்டியிருப்பதன் சோகம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான அரசியல் விழிப்புணர்வு பெற்று எம் தமிழ் இளைஞர்கள் சமூகப் போராளிகளாக மாறிவிடக்கூடாது.. என்றும் இவர்கள் இரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. இவர்கள் இந்த மூன்றாம் பால் வியாபாரத்தை நம்மிடம் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால்.... ரஜினி குறித்து எழுதுகிற ஆனந்த விகடன், ‘சினிமா ஓகே. அரசியல்?’ என்று எழுதுமா?(4.06.2007)



ஏன் தமிழ்நாட்டை தமிழர்களே ஆளக்கூடாதா? நீங்கள்தான் அதிகார மய்யமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடிகர்கள்தான் ஆளவேண்டுமா? அரசியலுக்கு ரஜினியை அழைக்கிற ஆனந்த விகடனே.. பல்கலைக் கழகம் கட்டி... பள்ளிகள் கட்டி.. ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க.. எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் நடித்த ரஜினி அவர்களின் பணத்தில் (அதாவது அவரது உயிருக்குயிரான எம் தமிழ்ச் செல்வங்கள் கொடுத்த பணத்தில்) கட்டப்பட்ட.. 'ஆஸ்ரம்’ பள்ளியில் இலவசக் கல்விபெறும் மாணவர்களின் பட்டியலை.. அல்லது எந்தெந்த ரஜினி ரசிகர் மன்ற பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற பட்டியலை.. அல்லது ஒரு குழந்தைக்கான ஓர் ஆண்டு கட்டணம் எவ்வளவு என்கிற பட்டியலையாவது ஆனந்த விகடன் கேட்டு வெளியிட்டுவிட்டு .. அவரை அரசியலுக்கு அழைக்குமா? இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?



விடுங்கடா சாமி.



(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)

No comments:

Post a Comment