Monday, April 19, 2010

ஒளரங்கசீப் - ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது..?

ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.

ஆனால் முஸ்லிம்கள் மீதுள்ள 'ஜக்காத் ' பற்றி குறிப்பிடவில்லை. அதை இங்கே சொல்வது நலம் என்று நினைக்கிறேன்.

முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத் ' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.

முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத் ' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத் ' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது. எனவே 'ஜகாத் ' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.

குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத் 'தை விதிக்க முடியாது.



ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.
வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?

எனவேதான் 'ஜிஸ்யா ' வந்தது.

இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?

சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா ' விதிக்கப்பட்டது.தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.

இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.

இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா '.
இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டனஅவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.



T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :



'ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல.

ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.


' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது ( பக்கம் 228).

கரைகண்டம் நெடுஞ்செழியன் பேசுகிறார்.
'பொதுமக்களின் வருவாயில் ஆட்சி செய்யும் இன்றைய ஜனநாயகத் தலைவர்களுக்குப் பல செய்திகளையும், பாடங்களையும் தமது செயல்கள் மூலம் விட்டுச் சென்றிருக்கிறார் பாதுஷா ஒளரங்கசீப் ஆலம்கீர்.
பொதுவாக ஆனால் தவறாக முஸ்லிம் ஆட்சியாளர் என்று கருதப்பட்ட இவர் தன் குடிமக்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் அந்த அன்பு எப்படி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தது என்பது தெளிவாகப் புலனாகின்றது.

புனித மக்கா நகரத்தின் ஷெரிப் இரு முறை தமது தூதர்கள் மூலம் ஒளரங்கசீப்பிடம் தமது நகர மக்களுக்குப் பெரும் பொருள் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.அதற்கு ஒளரங்கசீப், 'எனது தேசத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்கக் கூடாதா ? 'என்று வினவி வெறுமே திருப்பி அனுப்பினார்.

இதிலிருந்து அவர் ஒரு முஸ்லிம் மதப்பற்றாளர் என்பதை விடவும் தம் குடிம்மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட பாதுஷா என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி நெடுஞ்செழியன். பக்: 226)

ஒரு சமயம் வரிகட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட, அது குறித்து பாதுஷாவின் யோசனைக் கேட்டு கவர்னர் கடிதம் எழுதினார்.
பாதுஷா பதில் - 'நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மழையோ இல்லாமல் போனாலோ அல்லது இயற்கையின் எதிர்பாராத சதியாலோ விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலோ, அதற்காக விவசாய மக்களைப் பிரச்சினைக்குள்ளாக்க வேண்டாம்.

வரியைத் தள்ளுபடி செய்துவிடவும். கூடவே வரிகட்ட முடியாமலிருப்பது உண்மைதானா என்பதை நன்கு விசாரிக்க வேண்டும் ' என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகிறார் பாதுஷா. ' (வந்தார்கள் வென்றார்கள் - மதன். பக்: 169)ராஜாங்க விஷயங்களிலும் ஆஸ்தான சபையிலும் மரபுகளும் சம்பிரதாயங்களும் சட்டத்திட்டங்களும் மீறப்படக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் ஆலம்கீர்.
பாதுஷாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று குறிப்பாளர் விவரிக்கிறார்....

'பாதுஷா ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது சபையில் ஒரு கெளரவமான அமைதி நிலவும். யாரும் தப்பும் தவறுமாகப் பேசி நான் பார்த்ததில்லை. சபையில் இல்லாத ஒருவரைப் பற்றி கேலியாகப் பேசுவது பெரும் குற்றமாக கருதப்பட்டது.யாராக இருந்தாலும் சரி மிகவும் மரியாதையான, அடக்கமான வார்த்தைகளையே பேச்சில் உபயோகிக்கவேண்டும். சொல்வதைத் தெளிவாக, தீர்க்கமாகச் சொல்லவேண்டும்.தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார் ஒளரங்கசீப்.



அப்போது யார் வேண்டுமானாலும் நேரடியாகத் தங்கள் பிரச்சினைகளை மன்னரிடம் கூறலாம். சாமானியராக இருந்தாலும் அவர் சொல்வதை சக்கரவர்த்தி மிகுந்த கவனத்துடன் கேட்டு உடனே தீர்ப்பு வழங்குவார்.
'உடல் நலம் கருதி ஆலம்கீர் சற்று ஓய்வு எடுக்கவேண்டும்.... ' என்று ஒரு தளபதி பாதுஷாவுக்கு கடிதம் எழுதியதற்கு
'இறைவன் கருணையால் நான் நாடாள அனுப்பப்பட்டிருக்கிறேன். கடைசிவரை உழைக்க வேண்டியது என் கடமை. எனக்காக அல்ல, குடிமக்கள் நலனுக்காக. மக்கள் மகிழ்ச்சியில் பின்னிப் பிணைந்தால் ஒழிய எனக்கு என்று தனிப்பட்ட மகிழ்ச்சி எதுவும் கிடையாது.... ' என்று ஒளரங்கசீப்பிடமிருந்து பதில் போனது. (வந்தார்கள் வென்றார்கள் - மதன் பக்: 167-168)



தன் இரண்டாவது மகனுக்குக் கடிதம் மூலமாக சொல்லிய அறிவுரை....
ஓய்வு எடுப்பது, உல்லாசமாக விடுமுறை எடுப்பது... இதிலெல்லாம் ஆளப்பிறந்தவர்கள் நாட்டம் செலுத்தக்கூடாது. மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பது ஒன்றே ஆட்சியாளர்களின் கடமை. அரசரும் சரி, தண்ணீரும் சரி.. ஒரே இடத்தில் தேங்கக்கூடாது. தேங்கினால் தண்ணீர் கெட்டுப்போய்விடும், அரசரும் மதிப்பிழந்து போய்விடுவார்...!

'....வேண்டுமானால் நாட்டைப் பிரித்துக்கொள்ளுங்கள் தலைகள் உருள வேண்டாம், ரத்த ஆறு ஓட வழி வகுக்காதீர்கள்... ' என்று தன் மகன்களுக்கு கடைசி காலத்தில் கெஞ்சல் கடிதம் எழுதிய அரசர்தான் மக்களை குறிப்பாக இந்துக்களைக் கொடுமைப் படுத்தினான், மதவெறிப் பிடித்தவன்... ?

மூளைக்கு சிறிது வேலை கொடுங்கள். சிந்தனை என்ற ஒரு இயக்கம் உள்ளே இருக்கிறது. அழுக்காறு மனம் படைத்தவர்களுக்கு சமத்துவமும் தெரியாது, சகோதரத்துவமும் தெரியாது. நல்லிணக்கத்தின் இலக்கணம் எங்கே தெரியப்போகிறது ?

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்திருக்கும்போது நட்புணர்ச்சியின் விதையை அங்கே தூவ முடியாது!

பிரம்மாவின் உயர் படைப்பு நாங்கள்தான் என்று ஆயிரமாயிராண்டு காலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த இவர்களின் ராஜபோகம், சென்ற நூற்றாண்டில் அம்பேத்காரர்களாலும் பெரியார்களாலும் பரிக்கப்பட்டு விட்டன;
மக்கள் விழித்துக்கொண்டனர். அவற்றை ஜீரணிக்க முடியவில்ல. கொஞ்சநஞ்சமிருந்தது தேவதாசி, அதுவும் பறிபோய்விட்டது.
குலக்கல்வியைக் கொண்டுவந்தோம், கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது; சமீபத்தில் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்துப் பார்த்தோம், அதையும் புதைக்கவேண்டியதாகிவிட்டது;

முஸ்லிம்கள் குர்பானியை தடை செய்ய கோயிலில் பலி தடை என்று முன்னோடியாக வைத்துப்பார்த்தோம், அது கொண்டு வந்தவர்களையே குர்பானி(பலி) கொடுத்துவிடும் போலாகிவிட்டது. என்ன செய்வது ?

இப்படியாவது பிழைப்பை நடத்திப் பார்ப்போம், பழய குப்பையை கிளறினால் எதாவது கிடைக்காலாமல்லவா ? அதிலாவது குளிர் காயலாமல்லவா ? சங்கு சும்மாத்தானே கிடக்கிறது, ஊதுவோமே!

ஐயா! நம்மிடம் ஆயிரம் குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றை முதலில் சரி செய்வோம். பிறகு ஒளரங்கசீப்பைப் பார்ப்போம், அவர் எங்கேயும் போய்விடமாட்டார். என்ன சொன்னாலும் ஒளரங்கசீப், cheap ஆகிவிடமாட்டார்.
 நன்றி: வாஞ்சூர்.பிளக்சபாட்.காம்   http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_01.html

No comments:

Post a Comment