Thursday, July 15, 2010

கருப்பு பணம்

 கருப்பு பணம்
கருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆன்றோர், சான்றோர்,வலதுசாரி, இடதுசாரி முதல் சாமான்யர் வரை எல்லோரும் பங்கெடுத்து முழு வீச்சுடன் கருப்பு சந்தை வளர்சிக்கு பணி செய்கின்றோம். வரி கட்டாமல் வியாபாரம் தெருவுக்கு தெரு உண்டு. தெருவில் சாக்கடை புரண்டாலும் கவலை இல்லை. கோடையில் சின்னம்மை தாக்கினாலும் கவலை இல்லை.வரி கட்டாவிட்டாலும் கவலை இல்லை. மரத்து போய் விட்டதா இல்லை இது போதும் என்று நிறைவடைந்து விட்டோமா என தெரியவில்லை.

1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம், இன்று 9 இலட்சம் கோடியாக வந்து நிற்கின்றது. கடுமையான வரிச்சட்டங்கள், அளவுக்கு அதிகமான முத்திரைதாள் கட்டணம் போன்றவையே கருப்பு பணத்தினை தீ மூட்டி வளர்க்க முதல் காரணம். பின்னாளில் இவை தளர்த்த பட்ட போதும ஏமாற்றி பழகியது வசதியாய் இருந்ததால் வரி கட்டுதல் அநாவசியமாய் போய் விட்டது. அதற்கு அடுத்த காரணம் ஊழல்.

மக்களுக்கு அரசு நிர்வாகிகள் மேல் நம்பிக்கை இல்லை. தொகுதிக்கு தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி பக்கம் வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் எல்லாம் உண்டு. புழங்கும் இந்த கருப்பு பண அளவை நினைத்து பாருங்கள். இன்று உள்ள எல்லா அரசியல் கட்சிக்கு இதில் பங்கு உண்டு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அறவே இல்லை.

சந்தையில் கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்குகின்றது. இது இல்லாமல் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டாகவும் கருப்பு பணம் அதிகம் இருக்கின்றது. அதிக மதிப்புள்ள பணத்தினை சந்தையில் குறைத்து, வங்கி கணக்குகள் வழியே வர்த்தக பரிமாற்றங்கள் வர வழி செய்வது முக்கியமாகும். கருப்பு சந்தையின் அளவு விரியும் போது அதன் சுமை வரி செலுத்துவோரின் மேல் அதிகமாகும். அதன் விளைவாக ஒழுங்காய் வரி செலுத்துபவரும் அதை தவிர்க்கவே பார்ப்பார்கள்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டிய அவசியத்தை விட தொழில் வளத்தில், மக்கள் வளத்தில் முன்னேறிய நாடாக வேண்டிய அவசியம் நிறைய உண்டு. எளிமையான வரி அமைப்பு, அரசின் சிவப்பு நாடா அகன்ற தொழில் ஊக்குவிப்பு முறைகள், உள்கட்டுமான உயர்வுகள், அதிகரிக்கும் வரி செலுத்துவோர், குறைந்த பட்ச நேர்மை உள்ள அரசியல்வாதி போன்றவைதான் அடிப்படை தேவை. பாகிஸ்தானோடும், சீனாவோடும் ராணுவ அளவில் ஓப்பிடு செய்து கொண்டு மதச்சண்டைகளில் இன சண்டைகளில் நேரத்தை செலவீடு செய்தால் நிலையான முன்னேற பாதையில் உள்ள அரசு என்பது கனவில்தான் இருக்கும்.
Thanks to sinthipoma.blogspot.com

Monday, July 12, 2010

தங்கத்தின் விலை

பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, “இன்று இதுதான் விலை’ என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, “இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்’ என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது.

தங்கத்தின் கதை:

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 – கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

மொத்தத் தங்கம்:

தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.

சொக்கத்தங்கம்:

பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

நன்றி:-13-12-2009 தினமலர் and :-www.tntj.net

Sunday, July 11, 2010

கால் சென்டர்


கால் சென்டர்களை ஆதரிப்பவர்களின் தரப்பு வாதம் என்னவென்றால்“ எந்த ஒரு நன்மையும் சமூகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது கூடவே நாலு தீமையும் நுழையத்தான் செய்யும் ! நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே தவிர ஒரேயடியாக அந்த நன்மைக்கே முட்டுக்கட்டை போடுவது கடைந்தெடுத்த பத்தாம் பசலித் தனம் !” ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் ’ வரவேற்க வேண்டியவையே என்று நம் பெரியவர்களே சொல்லவில்லையா ?’ “Work hard, Party hard! (கடினமாக உழை ! மிகக் கடினமாக பார்ட்டி கொண்டாடு !) என்ற கொள்கை உடையவர்கள் இந்தத் துடிப்பு மிகு இளைஞர்கள் ! இதில் என்ன தவறு? இரண்டு மூன்று தலைமுறை பழசாய்ப் போனவர்களெல்லாம் பொறாமையில் மூக்கைச் சிந்தி ஒப்பாரி வைக்கலாமா ?”

மேலெழுந்தவாரியாக நியாயம் போல் தோன்றும் இந்த வாதங்களில் பூசி மெழுகப்படும் விஷ(ய)ங்களை நாம் கூர்ந்து நோக்க வேண்டும் ! வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே , தன் தந்தையின் மாத சம்பளத்தை விட அதிகம் வாங்கும் ஒரு பையனோ பெண்ணோ , சற்று மிதப்புடன் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான் ! ஓரிரு வருடங்களில் சரியாய்ப் போய் விடக்கூடிய ஒரு சில்லறைக் குற்றம்தான் ! ஆனால் , வார இறுதியில் கொண்டாடப் படும் week end பார்ட்டிகள்தான் இந்த BPO க்களின் மாபெரும் சாபக்கேடு !


சிகரெட் , மது (பொதுவாக பீர் , பல சமயங்களில் விஸ்கி , ரம் எனக் கொள்க !) என்றால் இயல்பாகவே நம் பெண்களுக்குள்ள அருவருப்பு , வெறுப்பு , அச்சம், கூச்சம் , தயக்கம் அத்தனையையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வங்காள விரிகுடாவில் வீசிய புண்ணியத்தை இந்தக் கால் சென்டர்கள் தேடிக் கொண்டுள்ளன !

இந்திய (குறிப்பாகத் தமிழ் ) சமூகத்தில் கடந்த பல நூறு ஆண்டுகளாக நெறிகளில் மெல்ல மெல்ல ஏற்பட்ட சீரழிவை , நான்கைந்து வருடங்களிலேயே அசுரத்தனமாக மிஞ்சிக் காட்டிய பெருமையும் இவற்றையே சாரும் ! புகை , பீர் மற்றும் ரம் , விஸ்கி போன்றவை தண்ணீர் போலப் புழங்கும் ஒரு சூழலில் , ஆண்கள் பெரும்பாலானோர் தன் வயம் இழந்த சூழ்நிலையில் , திருமணம் ஆகாத பெண்கள் வளைய வருவது மேல்தட்டு வர்க்கத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம் ! என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் இந்தப் பெண்ணுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற அக்கறையுள்ள மத்யமர்களுக்கு எந்நாளும் ஒத்து வராது !

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை எழுதியது போல் ‘நம் ஆட்களுக்கு அளவாகக் குடிக்கவும் தெரியாது !’ இன்றுதான் உலகின் கடைசி நாள் என்பது போல் அரக்கத் தனமாகக் கொண்டாடப் படும் இந்த வார இறுதிப் பார்ட்டிகளில் பெண்கள் பலரும் குடித்து விட்டு ‘அவுட் ’ ஆகி விழுவதும் , ‘கால் சென்டரில் இதெல்லாம் சகஜமப்பா !’ என்று சில தடியன்கள் அவர்களை ‘க்வாலிஸ் ’ வண்டியில் தூக்கி வந்து வீட்டில் பெற்றோரிடம் நடு நிசியில் தள்ளி விட்டுப் போவதும் எத்தனையோ வீடுகளில் நடக்கின்றன ! காலையில் அதே பெண் எழுந்து , தேள் கொட்டிய திருடனாய் இருக்கும் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் தன் உரிமைகளைப் பற்றி ஆவேசமாய் சர்ச்சை செய்வதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறதே !


பெண்களின் ஒழுக்க உணர்வு தளர்ந்தால் சமூகம் குட்டிச் சுவராக சில பத்தாண்டுகளே போதுமே ! பொருளாதார மேதைகள் நமக்குக் காட்டும் ரசவாதமான 10% GDP வளர்ச்சிக்கு நாம் கொடுத்துத் தொலைக்க வேண்டிய விலை இது என்று புறந்தள்ளி விட்டுப் போக முடியுமா பண்பாட்டின் இந்த அதல பாதாளச் சீர்கேட்டை ? நாளை சமூகத்தை மீட்டெடுக்க எத்தனை மகான்கள் முயன்றாலும் முடியுமா ? துரதிர்ஷ்டவசமாக , இது போன்ற சமுதாயச் சிக்கல்களுக்கெல்லாம் ‘RESET’ பட்டன் இன்னமும் கண்டு பிடிக்கப் படவில்லையே !!!

Thanks to cinemavirumbi.blogspot.com

Monday, June 28, 2010

வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்


கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே?

இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள்,

அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம். ‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

அமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்‘ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

-வே. மதிமாறன்

செம்மொழி மாநாடு


ஏ.ஆர். ரகுமானின், வன்இசையின் துணையோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சவ்ராஸ்டிரம், தமிழ் பாடகர்கள் ஒன்றிணைந்து, முக்கி… முக்கி…. பாடி செம்மொழி மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்களின் கூக்குரலில் தமிழர்களின் காது் செவிடாகிவிடும் அளவிற்கு தெருவெங்கும் திரும்ப, திரும்ப ஒலித்தது ‘தமிழ் மொழியாம்… தமிழ் மொழியாம்…’ என்கிற அபயக்குரல்…

கூக்குரலோடும், அபயக்குரல் பாணியிலும் இசையமைத்து, ஈழத்தமிழர்களின் துயரங்களை மறைமுகமாக உணர்த்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் என்று யாராவது ஒரு புண்ணியவன் விளக்கம் எழுதாமல் இருந்தால் அவர்களுக்கு புண்ணியமாக போகும். ஒலிப்பதிவை ஏ.ஆர். ரகுமான் ‘சிறப்பாக’ செய்ய, அதற்கு எற்றாற் போல் ஒளிப்பதிவை கவுதம் மேனன் செய்திருக்கிறார்.


சிதம்பரம் பத்மினி, சிறுமி ரீட்டா மேரி, சின்னாம்பதி கிராமத்து பெண்கள் இவர்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்த காவல்துறையின் வீரதீர தியாக செயல்களை நியாயப்படுத்தி என்ன தப்பு பண்ணாலும் அவர்களை ‘காக்க…காக்க…’என்கிற பெயரில் படம் எடுத்தவர்தான் இந்த கவுதம் மேனன். அதற்காகத்தான் செம்மொழி விளம்பர பிராஜக்ட் அவரிடம் தரப்பட்டதோ என்னவோ? (அவரு பத்து பைசாகூட வாங்கலியாமே அவரே சொல்லியிருக்கார்)

கவுதம் என்பது அவரு பேரு. மேனன் என்பது அவரு படிச்சு வாங்குன பட்டமா? (வசனம் உபயம் ‘வேதம் புதிது’திரைப்படம்)

எப்படியோ… பல மொழி பேசுற மக்களை ஒண்றிணைத்து தமிழுக்கு மாநாடு நடக்குது. வாழ்க தேசிய ஒற்றுமை.

போன ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை தங்க தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின போர்முரசு குஷ்பு தொகுத்து வழங்கினார்.

அந்த மேடையில் குஷ்பு, ‘பெரியாரின் கொள்கைகள்’ என்பதற்கு பதில், ‘பெரியாரின் கொள்ளைகள்’ என்று பேசினார்.


அதுபோல் செம்மொழி மாநாட்டு தொகுப்புரையை கலைஞர் டி.வி. புகழ் நடிகை நமீதா தொகுத்து வழங்குவாரோ என்னவோ? தெரியல.


ஒருவேளை அவருதான் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தா?!

அந்தம்மா வழக்கமா கலைஞர் டி.வியில பேசுறமாதிரி …

‘நம்ம கலைஜர் மச்சான்… செம..மொலி மாநட்டை..சூப்பரா.. நடத்துறாரு… நம்ம கலைஜர் மச்சானுக்கு உடன் பிரப்பு எல்லாம் ஒரு ஓ…போடு…’ ன்னு பேசுனா?’

நினைக்கவே நமக்கு சங்கடமா இருக்கு. உடன்பிறப்புகளுக்கு எப்படி இருக்குமோ

thanks to mathimaran.wordpress.com

Thursday, June 24, 2010

எண்ணெய் யுத்தம் போய் எண்ணெய்யுடன் யுத்தம்...

எண்ணெய் யுத்தம்
நூருத்தீன்
2005ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். அமெரிக்காவின் லூசியானா (Louisiana)மாநிலத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரை கேட்ரினா எனும கடும் புயல் தாக்கி சர்வ நாசமொன்றை உண்டாக்கியது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய நிர்வாகமும் மீட்புப் பணிகளை சரியான வகையில் கையாள முடியாமல் திணறினர்.எதை ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்கள் அதைச் செய்வதற்கு?
கேட்ரினாவின் மீட்புப் பணிகளில் கிடைத்த அவமானத்தையெல்லாம் புஷ் வழக்கம்போல் துடைத்து, தன் கோட்டுப் பைக்குள் திணித்துக் கொண்டார். அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் இயற்கை அழிவாய் அது இடம் பெற்றது. 2010, ஏப்ரல் மாதம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே லூசியானா மாநிலத்தின் கடலில் மற்றொரு பேரழிவு. இம்முறை புயல் இல்லை. கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று பொத்துக் கொண்டது. அதனுடன் ஆஜானுபாகுவான அமெரிக்கா தடுமாறி, அரையடியாகக் குன்றிப்போய் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை, உலகம் கிலியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


படத்தில் நீங்கள் பார்ப்பது, சினிமாவில் வரும் 3D டயனோஸர் குட்டியல்ல. அமெரிக்காவின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கும் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோவின் கிணற்று எண்ணெயில் மூழ்கிச் சாகப் போகும் பல்லாயிரக்கணக்கான கடல் பறவைகளில் ஒன்றுதான் அது. கிணறு என்றால் கொல்லைபுறத்தில் வாளியில் கயிறு கட்டி இறக்கி நீரெடுப்பது போலெல்லாம் அல்லாமல், இது பெரிசு. அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளச் சில தகவல்கள் பார்த்து விடுவோம். ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்ட வடிவமைக்கப்பட்டது டீப்வாட்டர் ஹாரிஸான் (Deepwater Horizon) எனப்படும் கடற்தளம். சுமார் 396 அடி நீளமும் 256 அடி அகலமுமான தளம் அது. கடலில் உள்ள எண்ணெய்க் கிணற்றினைத் தேர்ந்தெடுத்து அதை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் வேலை நடந்து கொண்டிருந்தது. 


பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்(BP)தான் இந்தக் களத்தைக் குத்தகைக்கு எடுத்து, லூசியானா மாநிலத்திற்குத் தென்கிழக்கே 64 கி.மீ. தொலைவில், பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ (Gulf of Mexico) கடலுக்கு அடியில் 5000 அடி ஆழத்தில் (சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான்) துளையிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

ஏப்ரல் மாதம், 20-ந் தேதி, இரவு 9:45 மணி இருக்கும். தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அடுத்து பிரம்மாண்டமாய் வெடித்தது. பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் இறந்து விழுந்தார்கள். 98 பேர்வரை தப்பித்து விட்டார்கள். அடுக்கு மாடி கட்டட உயரத்திற்குக் கொழுந்து விட்டு எரிந்தது தீ. காப்பாற்ற விரைந்த படகுகளின் பெயிண்ட்டெல்லாம் அந்தத் தீயின் கொடிய வெப்பத்தில் உருகின. அந்தப் பிரம்மாண்டத் தீயை அணைக்க வாய்ப்பெல்லாம் இல்லாமல் 22ஆம் தேதி தளம் கடலில் முழுவதும் மூழ்கிப் போனது.

"அய்யோ பாவமே!" என்று உச்சுக் கொட்டி அனுதாபப்பட்டு, பேருக்கு ஓர் இரங்கல் தெரிவித்துவிட்டு அடுத்த இரண்டாம் நாள் வேறு செய்திக்கு முன்னுரிமை தரமுடியாமல் மாபெரும் தலைவலி ஒன்று அமெரிக்காவை மெதுவாய், மிக மெதுவாய்ச் சூழ ஆரம்பித்தது. ஜுன் மாதம் தொடங்கியும் அது இன்னும் முடிந்த பாடில்லை.

என்ன பிரச்சினை? எண்ணெய்தான் பிரச்சினை; கச்சா எண்ணெய். இந்த விபத்தினால் கடலுக்கு அடியில் எண்ணெய்க் கிணற்றின் வாய் பிளந்து கொண்டு, அது பேரல் பேரலாகக் கச்சா எண்ணெயை கடலுக்குள் பீய்ச்சியடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் அளவைச் சரியாகக் கூட நிர்ணயிக்க முடியவில்லை. அவ்வளவு எண்ணெய். விண்கோள் படங்களின் உதவியைக் கொண்டு தோராயமாய் 5000 பேரல் எண்ணெய் கடலில் கலப்பதாய்க்க் கணக்கிட்டுள்ளார்கள். அதாவது தினமும் 160,000 லிட்டர்.  இந்தளவு எண்ணெய் கடலில் கலந்தால் எண்ணாகும்?

ஆரம்பத்தில் BP இதை எளிதாகத்தான் எடுத்துக் கொண்டது. "கடல் அளவைக் கணக்கில் கொண்டால் இதெல்லாம் ஜுஜுபி. அடக்கிடலாம்" என்றார்கள். 700 பணியாட்களும் நான்கு விமானங்களும் 32 படகுகளும் கடலிலிருந்து எண்ணெயை நீக்கி அப்புறப்படுத்த அமர்த்தப்பட்டன. கடல்மேல் மிதக்கும் எண்ணெயைச் சுற்றி மிதவைகளைக் கொண்டு கட்டுப்படுத்தி, அப்படியே கடலில் தொலைவுக்கு இழுத்துச் சென்று கொளுத்தி விடலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. "அதெல்லாம் முடியாது, நிலைமை ரொம்ப மோசம்" என்பதைப் பிற்பாடுதான் உணர்ந்தார்கள்.

தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமலா இத்தகைய ராட்சஷப் பணிகளில் ஈடுபடுவார்கள்? எல்லாம் இருந்ததுதான். விபத்து ஏற்பட்டால் தானாகவே இயங்கி, கிணற்றை மூடும் பாதுகாப்புச் சாதனம் இருந்தது. ஆனால், இந்த விபத்தில் அதுவும் பழுதடைந்து, அந்த ஒற்றைத் தடுப்பும் செயலற்றுப் போனது. அதனால், கடலின் அடியிலிருந்து எண்ணெய் நிற்காமல் பொங்கி எழுந்து கலக்க ஆரம்பித்து விட்டது. எண்ணெயில் கலப்படம் செய்வது நமக்குத் தெரியும். இங்கு எண்ணெய் கடலையே கலப்படமாக்க, பிரச்சனையின் பிரம்மாண்டம் BPக்கும் அமெரிக்காவிற்கும் மெதுவாய்ப் புரிய ஆரம்பித்தது.


சரி,கடலுக்கு அடியில் ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிப்படகுகளைச் செலுத்தி வால்வுகளை மூடிவிடலாம் என்று யோசித்தார்கள். அதற்காக ஆறு படகுகள் கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டன. அந்த முயற்சி தோல்வியுற்றது. ஏதாவது செய்து கடலில் கொட்டும் எண்ணெயை அடக்கியே ஆக வேண்டும். என்ன செய்வது?யோசித்தார்கள். அடுத்து 125 டன் எடையுள்ள பல அடுக்கு உயரமுள்ள கொள்கலம் ஒன்றைக் கடலுக்குள் இறக்கி, கிணற்றின் வாய்ப்பகுதியில் உட்கார வைத்து, அதன் மூலம் எண்ணெயை உறிஞ்சி, அது கடலில் கலக்காமல் கடலுக்கு மேலேயுள்ள கப்பலுக்கு இழுத்து விடலாம் என்று யோசனை சொன்னார்கள் பொறியாளர்கள்.  இவ்வளவு ஆழத்திலெல்லாம் அந்த செய்முறை இதற்குமுன் சோதித்துப் பார்க்கப்படவில்லை. ஏதாவது செய்துதானே ஆக வேண்டும். அதனால் அதை முயன்றார்கள். கசியும் வாயு கடலின் ஆழத்திலுள்ள கடும் குளிர் நீரில் இணைந்து, உறைந்து, அந்தக் கொள்கலத்தின் மேல்விதானத்தை அடைத்து விட்டது. கடலுக்குள் இறங்கிய அம்மாம் பெரிய கொள்கலம் பயனற்றுப் போனது.அந்த முயற்சியும் தோற்றது.

அடுத்து, டாப்ஹேட் (top hat) எனப் பெயரிடப்பட்ட சிறிய அளவிலான கொள்கலத்தைக் கடலுக்குள் இறக்கினர். கிணற்றிலிருந்து தள்ளி அதை நிறுத்தி, வெளியேறும் எண்ணெயைக் குழாய் மூலம் உறிஞ்சி, அதேபோல் மேலே கப்பலுக்கு அனுப்பும் திட்டம். அதுவும் சரிவரவில்லை. பிறகு வேறொரு திட்டம் யோசித்து, அதற்கு டாப்-கில் (top kill) என்று பெயரிட்டனர். இவ்வளவு நெருக்கடியிலும் அவர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் ஒரு பெயர் தேர்ந்தெடுப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திட்டங்களுக்குப் பெயர் வைப்பதற்கே சிலர் ரூம் போட்டு யோசித்து சொல்வார்களோ என்னவோ? இருக்கட்டும். இந்தத் திட்டம் என்னவென்றால் இரண்டு பைப்புகள் மூலம் மிகக் கடினமான திரவங்கள், மண் இவற்றையெல்லாம் செலுத்தி துளையை அடைக்க முயல்வது. அது எண்ணெய் வெளியேறுவதை பெருமளவு தடுத்து விடும்.  அடுத்து சிமெண்ட்டையும் அந்தத் துளைக்குள் அள்ளிக் கொட்டி நிரந்தரமாக அடைத்துவிடலாம் என்று முயன்றனர்.    இது வெற்றி பெறவேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் மே 29ந் தேதி அந்த முயற்சியும் தோல்வியுற்றது.


அடுத்து ரோபோ மெஷின்களின் உதவியுடன் கிணற்றில் முறிந்துள்ள பைப்புகளை வெட்டி நீக்கி அதன் மேல் நிரந்தர மூடி பதித்து அடைத்து விடலாம் என்ற முயற்சி. அது என்னடாவென்றால் முறிந்திருந்த பைப்பை அறுக்கும்போது ரம்பம் சென்று மாட்டிக் கொண்டது. அதுவும் வைரம் பாய்ந்த ரம்பம். மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள் உலகமகா மேஸ்த்திரிகள். ஒவ்வொரு முயற்சியையும் எளிதாய் வாசித்து விட்டாலும், எல்லாமே கடின முயற்சிகள். குளத்திலோ, ஆற்றிலோ குதித்து செய்யக் கூடியதைப் போன்ற வேலையில்லையே. தரையில் நின்று கொண்டு ஒரு மனிதன் பைப்பை அறுப்பதற்கும், துளையை மூட முயல்வதற்கும் கடலுக்குப் படுகீழே இயந்திரங்களை செலுத்தி ஒவ்வொரு யோசனையாக முயன்று பார்ப்பதற்கும் அளவிட முடியாத வித்தியாசம் உள்ளது.

ஆனால் அதற்காக கிணறோ, கடலோ பரிதாபப்பட்டதாகத் தெரியவில்லை. "என் கடன் எண்ணெய் துப்பிக் கிடப்பதே!" என்று கிணறு ஆக்ரோஷமாய் எண்ணெய் துப்பிக்கொண்டிருந்தது. ஜுன் மாதம் பிறந்தது. போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக 50 நாளும் ஆகிவிட்டது. கடலில் எண்ணெய் கலந்து கொண்டுதான் இருந்தது. BP-யின் பொறியாளர்களும், விக்கிரமாதித்தனாய் முயன்று கொண்டுதான் இருந்தார்கள். அதிகாரிகளோ கடலில் கலந்த எண்ணெய் 5300 சதுர கி.மீ. பரவியுள்ளதாக சொன்னார்கள். லூசியானா மாநிலத்திலிருந்து ஃப்ளோரிடா மாநிலத்துக் கடற்கரைவரை மெதுவாக நகர்ந்து ஏழு மைல் தொலைவிற்கு வந்து விட்டது எண்ணெய்க்கடல் என்று தெரிவித்தார்கள்.


அடுத்து அது இன்னம் பரவி அட்லாண்டிக் சமுத்திரத்திலும் கலக்க வாய்ப்புள்ளதாகக் கவலைப்பட்டார்கள். இறுதியில் 6ஆம் தேதி ஒருவிதமான மூடியை நீர்மூழ்கி ரோபோ இயந்திரங்கள் உதவி கொண்டு உடைந்திருந்த பைப்பின் மேல பொருத்தினர். "அப்பாடா" என்று சற்று ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது அனைவருக்கும். ஆனால் அது முழு நிம்மதியில்லை. மூடி பொருத்தியதன் பயனாய் நாளொன்றுக்கு 10,000 பேரல் எண்ணெயை கடலில் கலக்காமல் கைப்பற்ற முடிந்தது. அதற்கு முன்தினமும் 19,000 பேரல் எண்ணெய் கலப்பதாக உத்தேசித்திருந்தார்கள். ஆக முழுவதும் பிரச்சனை முடிவிற்கு  வராவிட்டாலும் கடலில் கலக்கும் எண்ணெய் அளவைக் கணிசமாய்க் குறைக்க முடிந்துள்ளது.

கடலிலேயே, அந்தக் கிணற்றுக்கு சற்றுத் தொலைவில் மற்றொரு கிணறு தோண்டி அதன் மூலம் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால்தான் இதனை மூட முடியும் என்பது நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆலோசனை. ஆனால் அதற்குப் பல மாதங்களாகுமாம். என்னவோ ஹாலிவுட் படம்போல் பரபரப்பாய்த்தான் செயல்பட்டார்கள். 'அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளது, தீவரமாய் நடவடிக்கை எடுத்து வருகிறது', என்பதை வலியுறுத்த இதுவரை மூன்று முறை லூசியானா பறந்தார் ஒபாமா. முதல்முறை பாதிப்படைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டவர், "முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று கவலையுடன் எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதிகாரிகளையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார். "எல்லாம் சமாளித்து விடுவார்கள்", என்பதுபோல் ஒரு சாரார் கவனித்துக் கொண்டிருந்தனர். கடலுக்கு அடியில் நிகழும் சங்கதிகளை BP தனது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பாக பல கேமரா கோணங்களில் காட்டிக் கொண்டிருக்கிறது.பார்ப்பவர்களுக்கு சினிமாவில் பல மானிட்டர்களில் கலர் கலராய் என்னென்னவோ ஓடுவதுபோல் காட்டுவார்களே அதுபோல் பரபரப்பு. மற்றொரு சாரார் அதைத் தாண்டி கவலையுடன் இழப்புகளையும் பிரச்சினைகளையும் பட்டியலிட ஆரம்பித்தனர்.


"ஒரேயொரு இடத்திலிருந்து அதாவது மெயின் குழாயின் மேல் பகுதியிலிருந்து மட்டுமே எண்ணெய்க் கசிவதாகப் பொய் சொன்னார்கள். மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய், பீச்சி அடித்துக் கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் அடைப்பது மகாக்கஷ்டம்" என்கிறார் எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் டாக் ஹாமில்டன். கடலில் கலந்து வருவது கச்சா எண்ணெய். தார் வஸ்துவும் கலந்து மிகவும்

பிசுபிசுப்பான எண்ணெய்ப் பிசின். எளிதில் ஆவியாகாது. கழுவி சுத்தம் செய்யவும் முடியாது. லேசில் கொளுத்தவும் முடியாது. இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள வைத்திருக்கும் உபகரணங்களுக் கெல்லாம் இது ஒரு சவால் என்று பொறியியல் வல்லுநர்கள் கவலை கொண்டனர்.
இந்த விபத்தால, 400 வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் 34,000 பறவைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி வரை 491 பறவைகள், 227 கடல் ஆமைகள், 27 டால்பின்கள் இந்த எண்ணெய்ப் பிசினில் நனைந்து, குடித்து, சுவைத்து இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீன்பிடித் தொழில் அப்படியே குலைந்துபோய், அந்த மக்களெல்லாம் கோபமும், விரக்தியும், கவலையுமாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவிரவும், கடலிலுள்ள மீன்களுக்கும் கடும் ஆபத்தான சூழ்நிலை. இந்த பாதிப்பிலிருந்து சுற்றுப்புற மாசு சகஜ நிலைக்குத் திரும்ப பற்பல ஆண்டுகள் ஆகும் என ஜார்ஜியா பல்கலையைச் சேர்ந்த சமந்தா ஜாய் (Samantha Joye) கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளிலுள்ள பீச்சிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது நின்று போக, அது சார்ந்த தொழில்களான ஹோட்டல் இன்ன பிறவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுடைய வருமானமும் போச்சு. அதெல்லாம் சரி. இது உலக ஆயில் ஜாம்பவான் BP, உலகப் போலீஸ் அமெரிக்கா என்ற
இரட்டை ஹீரோ பாக்ஸ் ஆஃபீஸ் படம் பம்மாத்துப் படக்கதை. அவர்களுடைய ஜேம்ஸ்பாண்ட் சாகசம் நமக்கு எதற்கு?

அடிநாதமாய் வேறொரு செய்தியொன்று இதில் நமக்கென்று உண்டு. பார்க்கலாம்.  எய்ட்ஸை விடக் கொடிய நோய் ஒன்று உலகம் முழுக்க உண்டு. கைச்சேதம், அதை நாமே உணர்வதில்லை. தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, இறை நம்பிக்கை, இறை சக்தி என்பதெல்லாம் இன்று ஏதோ ஒரு புத்தக அத்தியாயம் மட்டுமே என்றாகி விட்டிருக்கிறது. தவிர இந்த மேட்டிமையும் வலிமையும் மனிதனுக்கோ, வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் ஆகியனவற்றைத் அனிச்சையாகத் தோற்றுவித்து விடுகிறது. அதனால் கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் மட்டுமே மெய் என்ற பொய்ஞான நிலையை எட்டி தனது வலிமை, அறிவு, பணம், இதைக் கொண்டு எதையும் சாதித்து விட முடியும் என்ற போலி தன்னம்பிக்கையில்தான் ஆழ்ந்துள்ளது உலகம். இறைவன் இயற்கையை இலேசாக இரும வைத்தாலோ, மனித வலிமை இயற்கையைத் தவறாய் உரசினாலோ என்னாகும் என்பதுதான் அவ்வப்போது நிகழும் இத்தகைய உதாரணப் பேரழிவுகள். அதைப் படித்துப் பார்க்க பிரம்மாண்ட விளக்கொளியெல்லாம் தேவையில்லை, உள்ளத்தில் சிறிய ஒளியொன்று - இறையச்சம் - அது இருந்தாலே போதும். காட்சியைச் சரியான பிம்பத்தில் கண்டுகொள்ளலாம்.

நாமென்ன? இதற்கு முன்பும் வாழ்ந்திருந்தார்கள்.ஒவ்வொரு கால கட்டத்திலும்   அந்தந்த முன்னேற்றத்திற்கு    ஏற்ப பிரம்மாண்ட சமூகமெல்லாம் வாழ்ந்திருந்தார்கள். பிரம்மாண்டத்திற்கும் வலிமைக்கும் பேர்போன ஆது சமூகம் இருந்தது. தன்னை, கவுளுக்கும் மேலான கடவுள் என்று சொல்லிக் கொண்ட ஃபிர்அவ்ன் இருந்தான். எல்லாமும், எல்லோரும் இறந்து போன இறந்த காலம். அது ஏன் பெரும்பாலோருக்குச் சரிவரப் புரிவதில்லை? வான் தாண்டி செவ்வாயும், நீர் தாண்டி கடல் தரையும் தொட முடிந்தால், அனைத்தும் தன் முட்டிக்குள் அடங்கிவிட்டதாக மனித சமூகம் நினைக்க ஆரம்பித்தால் அங்குதானே அதன் தோல்வியே ஆரம்பமாகிறது.

இதோ இந்த விபத்து! அமெரிக்காவைப் பொருத்தவரை மற்றொரு சவால். ஜெயித்துக் காட்டுகிறேன் பார் என்றுதான் இதனை அணுகிக் கொண்டிருக்கிறது. BP-யோ திண்று கொழுத்த இலாபத்தின் ஒரு துளியான 20 பில்லியனை இதில் செலவழித்து விட்டு, இயற்கையின் ஒழுங்கு சீர்குலைந்து நாசமானது இருக்கட்டும், இப்படி டாலரெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிறதே என்று கலக்கும் ஒவ்வொரு சொட்டையும், காசுபோன துயரத்தில் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. Materialistic world!.

இதுவரை கடல் தாண்டி எண்ணெய்க்காக யுத்தம் புரிந்து கொண்டிருந்ததே அமெரிக்கா.  இப்பொழுது அந்த எண்ணெயுடனேயே, தனது கரையிலேயே கடலில் யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?

எண்ணெயுடனேயே யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?  என்னத்த சொல்வது?  வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் என்னத்த சொல்வது?

Thanks to Mr.Nizar Ahamed (PTM)

Wednesday, June 23, 2010

மணவை முஸ்தபா



அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தக்கவாறு தமிழ்மொழி முன்னேற வேண்டும் என்கிற எதிர்கால நோக்குடன் பணியாற்றும் வெகுசிலருள் ஒருவர் மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ஏழு கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்கிற ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார்.

 
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை ஈடுபடுத்தி வருபவர். அறிவியல் தமிழுக்காகத் தன் வாழ்கையையே அர்ப்பணித்தவர். இதுவரை அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.
 
 
யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார்.

அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா ஆற்றியுள்ள மிகச்சிறந்த தமிழ்த் தொண்டுகளைப் போற்றி, சிறப்பு நிகழ்வாக அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கிட முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று (மார்ச்.31) ஆணையிட்டுள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

 அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டுகள் ஆற்றி வருகிறார். மருத்துவக்கலைச் சொல்களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற இவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளதுடன், தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் இரண்டு தொகுதிகள் கொண்ட அறிவியல் கலைச்சொல் அகராதி உள்பட பல நூல்களைப் படைத்துத் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்துள்ளார்.

தற்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள மணவை முஸ்தபா முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு 10.3.2010 அன்று எழுதியுள்ள கடிதத்தில் தமது உடல்நிலை குறித்து எடுத்துரைத்துத்தம் மருத்துவச் செலவிற்குப் பயன்படும் வகையில் தாம் படைத்துள்ள அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி, தமக்குப் பரிவுத்தொகை வழங்கி உதவுறுமாறு கோரியுள்ளார்.

மணவை முஸ்தபாவின் கோரிக்கையை மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, அவர் ஆற்றியுள்ள மிகச்சிறந்த தமிழ்த் தொண்டுகளைப் போற்றி, சிறப்பு நிகழ்வாக அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொது நிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.


அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

1984-ல் தனக்கு கலைமாமணி விருது அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்து விட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல், மருத்துவம், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் இதுவரை ஐந்து பெரும் கலைச் சொல்லகராதிகளை உருவாக்கி சாதனை படைத்தவர் மணவை முஸ்தபா. யுனெஸ்கோ கூரியர்' மாத இதழின் தமிழ் பதிப்பில் சுமார் 35 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தவர். ஏறத்தாழ நாற்பது நூல்களை எழுதி வெளியிட்டவர். அவருக்கு தற்போது சுமார் 73 வயதாகிறது. அந்த மூத்த தமிழறிஞரை அழைத்து வந்து உரிய முறையில் கவுரப்படுத்தியுள்ளது ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை.

இப்பேரவை கடந்த 10 ஆண்டுகளாக டிசம்பர் 11ம் தேதி பாரதியார் பிறந்த நாளன்று பாரதி விழா நடத்தி, பல்வேறு துறைகளின் வல்லுனர்களுக்கு பாரதி விருது வழங்கி மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த வரிசையில் தொ.மு.சி. ரகுநாதன், ஜெயகாந்தன், அருணாராய் ஐ.ஏ.எஸ். ஆகியோரும் உண்டு. இவ்வாண்டும் வழக்கம் போல் ஈரோட்டில் விமரிசையான விழா நடத்தி மணவை முஸ்தபாவுக்கு பாரதி விருது வழங்கி கவுரவித்தது. அவருக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் விருது வழங்கினர். உடல் நல பாதிப்பால் முஸ்தபாவால் பேச முடியாததால் அவரது சார்பில் அவரது மகன் டாக்டர் செம்மல் ஏற்புரையாற்றினர். ஆனலும் முஸ்தபாவின் கம்பீரத் தமிழை பார்வையாளர்கள் கேட்க வேண்டுமென்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விழா ஒன்றில் அவர் பேசிய உரை, வீடியோ காட்சியாக திரையிடப்பட்டது.

மணவை முஸ்தபாவின்  தமிழ்ப் பணிக்கும், படைப்புப் பணிக்கும் ஊக்கமும் உறுதுணையாகவும் இருந்த அவரது துணைவியாரை மேடைக்கு அழைத்து மரியாதை செய்தனர். தனக்கு எல்லாமுமாக இருந்து வரும் தனது வாழ்க்கைத் துணைவிக்கு செய்யப்பட்ட மரியாதையை, வாய் பேச முடியாத நிலையில் உணர்ச்சி பொங்கப் பூரித்துப் பார்த்து நின்ற அந்த படைப்பாளியின் பார்வையில் மிளிர்ந்ததோ ஆயிரம் தாஜ்மகால்கள்! நெகிழ்ந்து போன, அரங்கமோ உணர்ச்சிகரமானது.