Thursday, June 24, 2010

எண்ணெய் யுத்தம் போய் எண்ணெய்யுடன் யுத்தம்...

எண்ணெய் யுத்தம்
நூருத்தீன்
2005ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். அமெரிக்காவின் லூசியானா (Louisiana)மாநிலத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரை கேட்ரினா எனும கடும் புயல் தாக்கி சர்வ நாசமொன்றை உண்டாக்கியது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய நிர்வாகமும் மீட்புப் பணிகளை சரியான வகையில் கையாள முடியாமல் திணறினர்.எதை ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்கள் அதைச் செய்வதற்கு?
கேட்ரினாவின் மீட்புப் பணிகளில் கிடைத்த அவமானத்தையெல்லாம் புஷ் வழக்கம்போல் துடைத்து, தன் கோட்டுப் பைக்குள் திணித்துக் கொண்டார். அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் இயற்கை அழிவாய் அது இடம் பெற்றது. 2010, ஏப்ரல் மாதம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே லூசியானா மாநிலத்தின் கடலில் மற்றொரு பேரழிவு. இம்முறை புயல் இல்லை. கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று பொத்துக் கொண்டது. அதனுடன் ஆஜானுபாகுவான அமெரிக்கா தடுமாறி, அரையடியாகக் குன்றிப்போய் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை, உலகம் கிலியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


படத்தில் நீங்கள் பார்ப்பது, சினிமாவில் வரும் 3D டயனோஸர் குட்டியல்ல. அமெரிக்காவின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கும் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோவின் கிணற்று எண்ணெயில் மூழ்கிச் சாகப் போகும் பல்லாயிரக்கணக்கான கடல் பறவைகளில் ஒன்றுதான் அது. கிணறு என்றால் கொல்லைபுறத்தில் வாளியில் கயிறு கட்டி இறக்கி நீரெடுப்பது போலெல்லாம் அல்லாமல், இது பெரிசு. அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளச் சில தகவல்கள் பார்த்து விடுவோம். ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்ட வடிவமைக்கப்பட்டது டீப்வாட்டர் ஹாரிஸான் (Deepwater Horizon) எனப்படும் கடற்தளம். சுமார் 396 அடி நீளமும் 256 அடி அகலமுமான தளம் அது. கடலில் உள்ள எண்ணெய்க் கிணற்றினைத் தேர்ந்தெடுத்து அதை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் வேலை நடந்து கொண்டிருந்தது. 


பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்(BP)தான் இந்தக் களத்தைக் குத்தகைக்கு எடுத்து, லூசியானா மாநிலத்திற்குத் தென்கிழக்கே 64 கி.மீ. தொலைவில், பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ (Gulf of Mexico) கடலுக்கு அடியில் 5000 அடி ஆழத்தில் (சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான்) துளையிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

ஏப்ரல் மாதம், 20-ந் தேதி, இரவு 9:45 மணி இருக்கும். தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அடுத்து பிரம்மாண்டமாய் வெடித்தது. பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் இறந்து விழுந்தார்கள். 98 பேர்வரை தப்பித்து விட்டார்கள். அடுக்கு மாடி கட்டட உயரத்திற்குக் கொழுந்து விட்டு எரிந்தது தீ. காப்பாற்ற விரைந்த படகுகளின் பெயிண்ட்டெல்லாம் அந்தத் தீயின் கொடிய வெப்பத்தில் உருகின. அந்தப் பிரம்மாண்டத் தீயை அணைக்க வாய்ப்பெல்லாம் இல்லாமல் 22ஆம் தேதி தளம் கடலில் முழுவதும் மூழ்கிப் போனது.

"அய்யோ பாவமே!" என்று உச்சுக் கொட்டி அனுதாபப்பட்டு, பேருக்கு ஓர் இரங்கல் தெரிவித்துவிட்டு அடுத்த இரண்டாம் நாள் வேறு செய்திக்கு முன்னுரிமை தரமுடியாமல் மாபெரும் தலைவலி ஒன்று அமெரிக்காவை மெதுவாய், மிக மெதுவாய்ச் சூழ ஆரம்பித்தது. ஜுன் மாதம் தொடங்கியும் அது இன்னும் முடிந்த பாடில்லை.

என்ன பிரச்சினை? எண்ணெய்தான் பிரச்சினை; கச்சா எண்ணெய். இந்த விபத்தினால் கடலுக்கு அடியில் எண்ணெய்க் கிணற்றின் வாய் பிளந்து கொண்டு, அது பேரல் பேரலாகக் கச்சா எண்ணெயை கடலுக்குள் பீய்ச்சியடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் அளவைச் சரியாகக் கூட நிர்ணயிக்க முடியவில்லை. அவ்வளவு எண்ணெய். விண்கோள் படங்களின் உதவியைக் கொண்டு தோராயமாய் 5000 பேரல் எண்ணெய் கடலில் கலப்பதாய்க்க் கணக்கிட்டுள்ளார்கள். அதாவது தினமும் 160,000 லிட்டர்.  இந்தளவு எண்ணெய் கடலில் கலந்தால் எண்ணாகும்?

ஆரம்பத்தில் BP இதை எளிதாகத்தான் எடுத்துக் கொண்டது. "கடல் அளவைக் கணக்கில் கொண்டால் இதெல்லாம் ஜுஜுபி. அடக்கிடலாம்" என்றார்கள். 700 பணியாட்களும் நான்கு விமானங்களும் 32 படகுகளும் கடலிலிருந்து எண்ணெயை நீக்கி அப்புறப்படுத்த அமர்த்தப்பட்டன. கடல்மேல் மிதக்கும் எண்ணெயைச் சுற்றி மிதவைகளைக் கொண்டு கட்டுப்படுத்தி, அப்படியே கடலில் தொலைவுக்கு இழுத்துச் சென்று கொளுத்தி விடலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. "அதெல்லாம் முடியாது, நிலைமை ரொம்ப மோசம்" என்பதைப் பிற்பாடுதான் உணர்ந்தார்கள்.

தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமலா இத்தகைய ராட்சஷப் பணிகளில் ஈடுபடுவார்கள்? எல்லாம் இருந்ததுதான். விபத்து ஏற்பட்டால் தானாகவே இயங்கி, கிணற்றை மூடும் பாதுகாப்புச் சாதனம் இருந்தது. ஆனால், இந்த விபத்தில் அதுவும் பழுதடைந்து, அந்த ஒற்றைத் தடுப்பும் செயலற்றுப் போனது. அதனால், கடலின் அடியிலிருந்து எண்ணெய் நிற்காமல் பொங்கி எழுந்து கலக்க ஆரம்பித்து விட்டது. எண்ணெயில் கலப்படம் செய்வது நமக்குத் தெரியும். இங்கு எண்ணெய் கடலையே கலப்படமாக்க, பிரச்சனையின் பிரம்மாண்டம் BPக்கும் அமெரிக்காவிற்கும் மெதுவாய்ப் புரிய ஆரம்பித்தது.


சரி,கடலுக்கு அடியில் ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிப்படகுகளைச் செலுத்தி வால்வுகளை மூடிவிடலாம் என்று யோசித்தார்கள். அதற்காக ஆறு படகுகள் கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டன. அந்த முயற்சி தோல்வியுற்றது. ஏதாவது செய்து கடலில் கொட்டும் எண்ணெயை அடக்கியே ஆக வேண்டும். என்ன செய்வது?யோசித்தார்கள். அடுத்து 125 டன் எடையுள்ள பல அடுக்கு உயரமுள்ள கொள்கலம் ஒன்றைக் கடலுக்குள் இறக்கி, கிணற்றின் வாய்ப்பகுதியில் உட்கார வைத்து, அதன் மூலம் எண்ணெயை உறிஞ்சி, அது கடலில் கலக்காமல் கடலுக்கு மேலேயுள்ள கப்பலுக்கு இழுத்து விடலாம் என்று யோசனை சொன்னார்கள் பொறியாளர்கள்.  இவ்வளவு ஆழத்திலெல்லாம் அந்த செய்முறை இதற்குமுன் சோதித்துப் பார்க்கப்படவில்லை. ஏதாவது செய்துதானே ஆக வேண்டும். அதனால் அதை முயன்றார்கள். கசியும் வாயு கடலின் ஆழத்திலுள்ள கடும் குளிர் நீரில் இணைந்து, உறைந்து, அந்தக் கொள்கலத்தின் மேல்விதானத்தை அடைத்து விட்டது. கடலுக்குள் இறங்கிய அம்மாம் பெரிய கொள்கலம் பயனற்றுப் போனது.அந்த முயற்சியும் தோற்றது.

அடுத்து, டாப்ஹேட் (top hat) எனப் பெயரிடப்பட்ட சிறிய அளவிலான கொள்கலத்தைக் கடலுக்குள் இறக்கினர். கிணற்றிலிருந்து தள்ளி அதை நிறுத்தி, வெளியேறும் எண்ணெயைக் குழாய் மூலம் உறிஞ்சி, அதேபோல் மேலே கப்பலுக்கு அனுப்பும் திட்டம். அதுவும் சரிவரவில்லை. பிறகு வேறொரு திட்டம் யோசித்து, அதற்கு டாப்-கில் (top kill) என்று பெயரிட்டனர். இவ்வளவு நெருக்கடியிலும் அவர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் ஒரு பெயர் தேர்ந்தெடுப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திட்டங்களுக்குப் பெயர் வைப்பதற்கே சிலர் ரூம் போட்டு யோசித்து சொல்வார்களோ என்னவோ? இருக்கட்டும். இந்தத் திட்டம் என்னவென்றால் இரண்டு பைப்புகள் மூலம் மிகக் கடினமான திரவங்கள், மண் இவற்றையெல்லாம் செலுத்தி துளையை அடைக்க முயல்வது. அது எண்ணெய் வெளியேறுவதை பெருமளவு தடுத்து விடும்.  அடுத்து சிமெண்ட்டையும் அந்தத் துளைக்குள் அள்ளிக் கொட்டி நிரந்தரமாக அடைத்துவிடலாம் என்று முயன்றனர்.    இது வெற்றி பெறவேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் மே 29ந் தேதி அந்த முயற்சியும் தோல்வியுற்றது.


அடுத்து ரோபோ மெஷின்களின் உதவியுடன் கிணற்றில் முறிந்துள்ள பைப்புகளை வெட்டி நீக்கி அதன் மேல் நிரந்தர மூடி பதித்து அடைத்து விடலாம் என்ற முயற்சி. அது என்னடாவென்றால் முறிந்திருந்த பைப்பை அறுக்கும்போது ரம்பம் சென்று மாட்டிக் கொண்டது. அதுவும் வைரம் பாய்ந்த ரம்பம். மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள் உலகமகா மேஸ்த்திரிகள். ஒவ்வொரு முயற்சியையும் எளிதாய் வாசித்து விட்டாலும், எல்லாமே கடின முயற்சிகள். குளத்திலோ, ஆற்றிலோ குதித்து செய்யக் கூடியதைப் போன்ற வேலையில்லையே. தரையில் நின்று கொண்டு ஒரு மனிதன் பைப்பை அறுப்பதற்கும், துளையை மூட முயல்வதற்கும் கடலுக்குப் படுகீழே இயந்திரங்களை செலுத்தி ஒவ்வொரு யோசனையாக முயன்று பார்ப்பதற்கும் அளவிட முடியாத வித்தியாசம் உள்ளது.

ஆனால் அதற்காக கிணறோ, கடலோ பரிதாபப்பட்டதாகத் தெரியவில்லை. "என் கடன் எண்ணெய் துப்பிக் கிடப்பதே!" என்று கிணறு ஆக்ரோஷமாய் எண்ணெய் துப்பிக்கொண்டிருந்தது. ஜுன் மாதம் பிறந்தது. போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக 50 நாளும் ஆகிவிட்டது. கடலில் எண்ணெய் கலந்து கொண்டுதான் இருந்தது. BP-யின் பொறியாளர்களும், விக்கிரமாதித்தனாய் முயன்று கொண்டுதான் இருந்தார்கள். அதிகாரிகளோ கடலில் கலந்த எண்ணெய் 5300 சதுர கி.மீ. பரவியுள்ளதாக சொன்னார்கள். லூசியானா மாநிலத்திலிருந்து ஃப்ளோரிடா மாநிலத்துக் கடற்கரைவரை மெதுவாக நகர்ந்து ஏழு மைல் தொலைவிற்கு வந்து விட்டது எண்ணெய்க்கடல் என்று தெரிவித்தார்கள்.


அடுத்து அது இன்னம் பரவி அட்லாண்டிக் சமுத்திரத்திலும் கலக்க வாய்ப்புள்ளதாகக் கவலைப்பட்டார்கள். இறுதியில் 6ஆம் தேதி ஒருவிதமான மூடியை நீர்மூழ்கி ரோபோ இயந்திரங்கள் உதவி கொண்டு உடைந்திருந்த பைப்பின் மேல பொருத்தினர். "அப்பாடா" என்று சற்று ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது அனைவருக்கும். ஆனால் அது முழு நிம்மதியில்லை. மூடி பொருத்தியதன் பயனாய் நாளொன்றுக்கு 10,000 பேரல் எண்ணெயை கடலில் கலக்காமல் கைப்பற்ற முடிந்தது. அதற்கு முன்தினமும் 19,000 பேரல் எண்ணெய் கலப்பதாக உத்தேசித்திருந்தார்கள். ஆக முழுவதும் பிரச்சனை முடிவிற்கு  வராவிட்டாலும் கடலில் கலக்கும் எண்ணெய் அளவைக் கணிசமாய்க் குறைக்க முடிந்துள்ளது.

கடலிலேயே, அந்தக் கிணற்றுக்கு சற்றுத் தொலைவில் மற்றொரு கிணறு தோண்டி அதன் மூலம் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால்தான் இதனை மூட முடியும் என்பது நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆலோசனை. ஆனால் அதற்குப் பல மாதங்களாகுமாம். என்னவோ ஹாலிவுட் படம்போல் பரபரப்பாய்த்தான் செயல்பட்டார்கள். 'அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளது, தீவரமாய் நடவடிக்கை எடுத்து வருகிறது', என்பதை வலியுறுத்த இதுவரை மூன்று முறை லூசியானா பறந்தார் ஒபாமா. முதல்முறை பாதிப்படைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டவர், "முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று கவலையுடன் எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதிகாரிகளையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார். "எல்லாம் சமாளித்து விடுவார்கள்", என்பதுபோல் ஒரு சாரார் கவனித்துக் கொண்டிருந்தனர். கடலுக்கு அடியில் நிகழும் சங்கதிகளை BP தனது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பாக பல கேமரா கோணங்களில் காட்டிக் கொண்டிருக்கிறது.பார்ப்பவர்களுக்கு சினிமாவில் பல மானிட்டர்களில் கலர் கலராய் என்னென்னவோ ஓடுவதுபோல் காட்டுவார்களே அதுபோல் பரபரப்பு. மற்றொரு சாரார் அதைத் தாண்டி கவலையுடன் இழப்புகளையும் பிரச்சினைகளையும் பட்டியலிட ஆரம்பித்தனர்.


"ஒரேயொரு இடத்திலிருந்து அதாவது மெயின் குழாயின் மேல் பகுதியிலிருந்து மட்டுமே எண்ணெய்க் கசிவதாகப் பொய் சொன்னார்கள். மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய், பீச்சி அடித்துக் கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் அடைப்பது மகாக்கஷ்டம்" என்கிறார் எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் டாக் ஹாமில்டன். கடலில் கலந்து வருவது கச்சா எண்ணெய். தார் வஸ்துவும் கலந்து மிகவும்

பிசுபிசுப்பான எண்ணெய்ப் பிசின். எளிதில் ஆவியாகாது. கழுவி சுத்தம் செய்யவும் முடியாது. லேசில் கொளுத்தவும் முடியாது. இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள வைத்திருக்கும் உபகரணங்களுக் கெல்லாம் இது ஒரு சவால் என்று பொறியியல் வல்லுநர்கள் கவலை கொண்டனர்.
இந்த விபத்தால, 400 வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் 34,000 பறவைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி வரை 491 பறவைகள், 227 கடல் ஆமைகள், 27 டால்பின்கள் இந்த எண்ணெய்ப் பிசினில் நனைந்து, குடித்து, சுவைத்து இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீன்பிடித் தொழில் அப்படியே குலைந்துபோய், அந்த மக்களெல்லாம் கோபமும், விரக்தியும், கவலையுமாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவிரவும், கடலிலுள்ள மீன்களுக்கும் கடும் ஆபத்தான சூழ்நிலை. இந்த பாதிப்பிலிருந்து சுற்றுப்புற மாசு சகஜ நிலைக்குத் திரும்ப பற்பல ஆண்டுகள் ஆகும் என ஜார்ஜியா பல்கலையைச் சேர்ந்த சமந்தா ஜாய் (Samantha Joye) கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளிலுள்ள பீச்சிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது நின்று போக, அது சார்ந்த தொழில்களான ஹோட்டல் இன்ன பிறவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுடைய வருமானமும் போச்சு. அதெல்லாம் சரி. இது உலக ஆயில் ஜாம்பவான் BP, உலகப் போலீஸ் அமெரிக்கா என்ற
இரட்டை ஹீரோ பாக்ஸ் ஆஃபீஸ் படம் பம்மாத்துப் படக்கதை. அவர்களுடைய ஜேம்ஸ்பாண்ட் சாகசம் நமக்கு எதற்கு?

அடிநாதமாய் வேறொரு செய்தியொன்று இதில் நமக்கென்று உண்டு. பார்க்கலாம்.  எய்ட்ஸை விடக் கொடிய நோய் ஒன்று உலகம் முழுக்க உண்டு. கைச்சேதம், அதை நாமே உணர்வதில்லை. தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, இறை நம்பிக்கை, இறை சக்தி என்பதெல்லாம் இன்று ஏதோ ஒரு புத்தக அத்தியாயம் மட்டுமே என்றாகி விட்டிருக்கிறது. தவிர இந்த மேட்டிமையும் வலிமையும் மனிதனுக்கோ, வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் ஆகியனவற்றைத் அனிச்சையாகத் தோற்றுவித்து விடுகிறது. அதனால் கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் மட்டுமே மெய் என்ற பொய்ஞான நிலையை எட்டி தனது வலிமை, அறிவு, பணம், இதைக் கொண்டு எதையும் சாதித்து விட முடியும் என்ற போலி தன்னம்பிக்கையில்தான் ஆழ்ந்துள்ளது உலகம். இறைவன் இயற்கையை இலேசாக இரும வைத்தாலோ, மனித வலிமை இயற்கையைத் தவறாய் உரசினாலோ என்னாகும் என்பதுதான் அவ்வப்போது நிகழும் இத்தகைய உதாரணப் பேரழிவுகள். அதைப் படித்துப் பார்க்க பிரம்மாண்ட விளக்கொளியெல்லாம் தேவையில்லை, உள்ளத்தில் சிறிய ஒளியொன்று - இறையச்சம் - அது இருந்தாலே போதும். காட்சியைச் சரியான பிம்பத்தில் கண்டுகொள்ளலாம்.

நாமென்ன? இதற்கு முன்பும் வாழ்ந்திருந்தார்கள்.ஒவ்வொரு கால கட்டத்திலும்   அந்தந்த முன்னேற்றத்திற்கு    ஏற்ப பிரம்மாண்ட சமூகமெல்லாம் வாழ்ந்திருந்தார்கள். பிரம்மாண்டத்திற்கும் வலிமைக்கும் பேர்போன ஆது சமூகம் இருந்தது. தன்னை, கவுளுக்கும் மேலான கடவுள் என்று சொல்லிக் கொண்ட ஃபிர்அவ்ன் இருந்தான். எல்லாமும், எல்லோரும் இறந்து போன இறந்த காலம். அது ஏன் பெரும்பாலோருக்குச் சரிவரப் புரிவதில்லை? வான் தாண்டி செவ்வாயும், நீர் தாண்டி கடல் தரையும் தொட முடிந்தால், அனைத்தும் தன் முட்டிக்குள் அடங்கிவிட்டதாக மனித சமூகம் நினைக்க ஆரம்பித்தால் அங்குதானே அதன் தோல்வியே ஆரம்பமாகிறது.

இதோ இந்த விபத்து! அமெரிக்காவைப் பொருத்தவரை மற்றொரு சவால். ஜெயித்துக் காட்டுகிறேன் பார் என்றுதான் இதனை அணுகிக் கொண்டிருக்கிறது. BP-யோ திண்று கொழுத்த இலாபத்தின் ஒரு துளியான 20 பில்லியனை இதில் செலவழித்து விட்டு, இயற்கையின் ஒழுங்கு சீர்குலைந்து நாசமானது இருக்கட்டும், இப்படி டாலரெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிறதே என்று கலக்கும் ஒவ்வொரு சொட்டையும், காசுபோன துயரத்தில் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. Materialistic world!.

இதுவரை கடல் தாண்டி எண்ணெய்க்காக யுத்தம் புரிந்து கொண்டிருந்ததே அமெரிக்கா.  இப்பொழுது அந்த எண்ணெயுடனேயே, தனது கரையிலேயே கடலில் யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?

எண்ணெயுடனேயே யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?  என்னத்த சொல்வது?  வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் என்னத்த சொல்வது?

Thanks to Mr.Nizar Ahamed (PTM)

No comments:

Post a Comment