சமீபத்தில் ஒரு நாள் தமிழக கிராமம் ஒன்றில் ஒரு மறக்க முடியாத
காட்சியினைக் கண்டேன். முதலில் அது ஏதோ கோயில் திருவிழா என்று
நினைத்தேன். பிறகு தான் புரிந்தது, அது அந்த ஊர் மக்களுக்கு அரசு இலவச தொலைக்காட்சி வழங்கும் விழா என்று. சந்தையில் இருந்து கூடைகளைச்சுமந்தபடி பெண்கள் போவது போல அன்று அந்தி சாயும் பொழுதில் சாலையில் இலவசதொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுமந்தபடி மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் போவதுவித்தியாசமான ஒரு காட்சியாய் இருந்தது. அவர்களது நடையில் ஓர் அவசரத்தனம்இருந்தது. கொஞ்சம் மெதுவாக நடந்தால் பின்னாலே யாராவது வந்து இதைப்பிடுங்கிக் கொள்வார்களோ என்கிற மாதிரியான அவசரத்தனம். அது என்னுடைய அசட்டுக் கற்பனை என்று நினைத்துக் கொண்டேன்.
பிறகு அந்தக் கிராமத்தில் நண்பரின் வீட்டிற்குப் போனபோது அவர்களுக்கு
நான்கு இலவச தொலைக்காட்சிகள் கிடைத்திருப்பதை அறிந்தேன். அவர்களிடம் ஏற்கெனவே வண்ணத் தொலைக்காட்சி ஒன்று இருக்கிறது. நேரடி ஒளிபரப்பு நிகழத்தும் கண்ட்ரோல் ரூம் போல அவர்களது வீட்டில் தொலைக்காட்சிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது போல கற்பனை செய்து பார்த்தேன். நண்பருக்கு என்னுடைய கற்பனைகள் தெரியாது.
இலவசம் என்கிற வார்த்தைக்குத் தேர்தல் ஜனநாயகத்தில் இருக்கும் மகிமையை சமீப காலமாக அரசியல் கட்சிகள் சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றன. மக்களிடையே நல்ல பெயரினை வாங்க நேர்மையான அறிவார்த்தமான முயற்சிகள் தேவையில்லை, இது போன்ற இலவசங்களே போதும் என்பது தான் தேர்தல் முடிவுகள், சில விதிவிலக்குகள் தவிர நமக்கு உணர்த்தி இருக்கின்றன. இலவசங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துமா? இந்திய ஜனநாயகத்தின் சோஷலிச நாட்களில் அரசு இயந்திரத்தின் லஞ்ச லாவண்யங்களும் பாபுத்தனங்களும் அடித்தட்டு மக்களுக்காக இயற்றப்பட்ட சில நன்மைகளையும் காற்றில் மிதக்கும் சோப்புக் குமிழ்களாக மாற்றி வைத்திருந்தன. இப்போது முதலாளித்துவத்தை நோக்கி இந்திய ஜனநாயகம் திரும்பும்போது, "பொருளாதார வளர்ச்சி அதாவது ஜி.டீ.பி. உயர்ந்தால் அதன் பலன் சமூகத்தில் எல்லோருக்கும் சென்றடையும்" என்று சொல்லப்பட்டது. ஜி.டீ.பி. உயர்ந்தது. பணக்காரர்களின் நிலை உயர்ந்தது. அந்நிய முதலீடு அதிகரித்தது.
மத்திய வர்க்கத்தினருக்குப் புதுப் புது தொழில்நுட்ப சாமான்கள் குறைந்த விலையில் கிடைத்தன. இந்தியா வல்லரசாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்கிற ஆனந்த கீதம் விடாமல் வாசிக்கபட்டது. ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு இந்த ஆனந்த கீதம் வெறும் நாடகம் என்பது நன்றாகத்தெரியும்.ஜி.டி.பி.க்கும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுக்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லை. பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செலுத்திய அரசு, நலத்திட்டங்களில் எந்தளவு அக்கறை செலுத்தி இருக்கிறது, வெற்றுக்கோஷங்கள், இலவச கலர்களைத் தவிர. பிரதமர் மன்மோகன் சிங் கூட தனது உரையில் முதலாளிகள் புது பொருளாதார வளர்ச்சியில் அடித்தட்டு மக்களுக்குக் கொடுக்கவேண்டிய பங்கினைச் சரியாகக் கொடுக்கவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார். அட, அசட்டுப் பய புள்ள என்று தனி டிராக்கில் ஒரு குரல் எனக்குள் அப்போது கேட்டது.
உலகிலே அதிக படிப்பறிவற்ற மக்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.
குழந்தை இறப்பு சதவீதத்திலும் இந்தியாதான் நம்பர் ஒன். இங்கு பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஆரோக்கியமான உணவில்லாமல்தான் வாழ்கிறார்கள். இதை எல்லாம் விட முக்கியமான ஒரு பெரிய தடைக்கல் இருக்கிறது. அது நாளுக்கு நாள் இன்னும் வலுவாகி வரும் சாதி அமைப்பு. இன்னும் கிராமங்களில் தெருக்கள் ஒவ்வொன்றும் சாதிவாரியாகப் பிரிந்துதான் கிடக்கின்றன. உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்கள் தங்கள் பகுதி பக்கம் வந்து விடக்கூடாது என்று சுவர் கட்டி வைத்த கொடுமையும், அதிலே மின்சாரம் பாய்ச்சிய அவலமும் நிகழ்ந்தது. எங்கள் தெய்வத்தை தொடும் தகுதி உனக்கு வந்து விட்டதா என மலம் சாப்பிட வைக்கும் வக்கிரம் இன்னும் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, சமூக மாற்றங்களைக் கூட இந்த சாதிய அடுக்கு கட்டுமானங்கள் அவ்வளவு எளிதில் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கத் தடையாக இருக்கின்றன.
பதினொன்றாவது திட்ட அறிக்கையின்படி இன்று இந்த நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியினை இந்தியா முழுக்க உள்ள அடித்தட்டு மக்களுக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்கும் எடுத்துச் செல்வது ஓர் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இது மிக தாமதமான ஒரு மாற்றம். இது கோஷம் என்கிற அளவில் நின்று விடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என சொல்கிறார்கள். இன்றைய முக்கால்பங்கு முதலீட்டாளர் சமூகமாய் மாறி இருக்கும் இந்தியாவில் அரசு தனது பலத்தை வெகுவாக இழந்து கொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்கள் என்பது நாட்டிற்குப் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் பழையகாலத்து தவறான யோசனைகள் என்று இன்றைய பொருளாதார ஜீனியஸ்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அரசு என்பது வணிகன் அல்ல. ஆனால் வணிகங்களின் கை ஓங்கும் சூழலில் அடித்தட்டு மக்களும் விளிம்பு நிலை மனிதர்களும் இன்னும் அதிகமாய் பாதிக்கபடுவார்கள்.
சமூக அளவில் கல்வி இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். கிடைக்கும் கல்வியும் இன்னும் தரமேற்றப்பட வேண்டும். கல்வியும் மருத்துவமும் கொழுத்த லாபம் ஈட்டும் தொழில்களாக மாறிப் போன சூழலில் விளிம்பு நிலை மனிதர்கள் நிலை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. பண்டைய காலங்களில் நிலப்பிரபுக்கள் ஏழைகளுக்குக் கை நிறைய தானம் அளிப்பார்களாம். வாய் நிறைய வாழ்த்திச் சென்றனவாம் ஏழை உள்ளங்கள். இதுபோன்று இலவசங்கள், தானங்கள், தருமங்கள் அடித்தட்டு மக்களுக்கு உதவிடாது. சமூக, கலாச்சார, பொருளாதார அளவில் தொலைதூரப் பார்வையோடு அரசு மற்றும் அதிகாரங்கள், சரியான திட்டங்கள் மற்றும் அணுகுமுறையோடு செயல்பட்டால் மட்டுமே பதினொன்றாவது திட்டத்தின் இலக்கு சாத்தியம் ஆகும்.
ஆனால் அதற்கான பொறுமையும் நேர்மையும் இன்று இருக்கிறதா?
Thanks to Mr.Nizaar Ahamed.J (P.T.M)