அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தக்கவாறு தமிழ்மொழி முன்னேற வேண்டும் என்கிற எதிர்கால நோக்குடன் பணியாற்றும் வெகுசிலருள் ஒருவர் மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ஏழு கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்கிற ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார்.
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை ஈடுபடுத்தி வருபவர். அறிவியல் தமிழுக்காகத் தன் வாழ்கையையே அர்ப்பணித்தவர். இதுவரை அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.
யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார்.
அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா ஆற்றியுள்ள மிகச்சிறந்த தமிழ்த் தொண்டுகளைப் போற்றி, சிறப்பு நிகழ்வாக அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கிட முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று (மார்ச்.31) ஆணையிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டுகள் ஆற்றி வருகிறார். மருத்துவக்கலைச் சொல்களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற இவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளதுடன், தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் இரண்டு தொகுதிகள் கொண்ட அறிவியல் கலைச்சொல் அகராதி உள்பட பல நூல்களைப் படைத்துத் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்துள்ளார்.
தற்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள மணவை முஸ்தபா முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு 10.3.2010 அன்று எழுதியுள்ள கடிதத்தில் தமது உடல்நிலை குறித்து எடுத்துரைத்துத்தம் மருத்துவச் செலவிற்குப் பயன்படும் வகையில் தாம் படைத்துள்ள அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி, தமக்குப் பரிவுத்தொகை வழங்கி உதவுறுமாறு கோரியுள்ளார்.
மணவை முஸ்தபாவின் கோரிக்கையை மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, அவர் ஆற்றியுள்ள மிகச்சிறந்த தமிழ்த் தொண்டுகளைப் போற்றி, சிறப்பு நிகழ்வாக அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொது நிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.
அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
1984-ல் தனக்கு கலைமாமணி விருது அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்து விட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல், மருத்துவம், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் இதுவரை ஐந்து பெரும் கலைச் சொல்லகராதிகளை உருவாக்கி சாதனை படைத்தவர் மணவை முஸ்தபா. யுனெஸ்கோ கூரியர்' மாத இதழின் தமிழ் பதிப்பில் சுமார் 35 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தவர். ஏறத்தாழ நாற்பது நூல்களை எழுதி வெளியிட்டவர். அவருக்கு தற்போது சுமார் 73 வயதாகிறது. அந்த மூத்த தமிழறிஞரை அழைத்து வந்து உரிய முறையில் கவுரப்படுத்தியுள்ளது ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை.
இப்பேரவை கடந்த 10 ஆண்டுகளாக டிசம்பர் 11ம் தேதி பாரதியார் பிறந்த நாளன்று பாரதி விழா நடத்தி, பல்வேறு துறைகளின் வல்லுனர்களுக்கு பாரதி விருது வழங்கி மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த வரிசையில் தொ.மு.சி. ரகுநாதன், ஜெயகாந்தன், அருணாராய் ஐ.ஏ.எஸ். ஆகியோரும் உண்டு. இவ்வாண்டும் வழக்கம் போல் ஈரோட்டில் விமரிசையான விழா நடத்தி மணவை முஸ்தபாவுக்கு பாரதி விருது வழங்கி கவுரவித்தது. அவருக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் விருது வழங்கினர். உடல் நல பாதிப்பால் முஸ்தபாவால் பேச முடியாததால் அவரது சார்பில் அவரது மகன் டாக்டர் செம்மல் ஏற்புரையாற்றினர். ஆனலும் முஸ்தபாவின் கம்பீரத் தமிழை பார்வையாளர்கள் கேட்க வேண்டுமென்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விழா ஒன்றில் அவர் பேசிய உரை, வீடியோ காட்சியாக திரையிடப்பட்டது.
மணவை முஸ்தபாவின் தமிழ்ப் பணிக்கும், படைப்புப் பணிக்கும் ஊக்கமும் உறுதுணையாகவும் இருந்த அவரது துணைவியாரை மேடைக்கு அழைத்து மரியாதை செய்தனர். தனக்கு எல்லாமுமாக இருந்து வரும் தனது வாழ்க்கைத் துணைவிக்கு செய்யப்பட்ட மரியாதையை, வாய் பேச முடியாத நிலையில் உணர்ச்சி பொங்கப் பூரித்துப் பார்த்து நின்ற அந்த படைப்பாளியின் பார்வையில் மிளிர்ந்ததோ ஆயிரம் தாஜ்மகால்கள்! நெகிழ்ந்து போன, அரங்கமோ உணர்ச்சிகரமானது.
No comments:
Post a Comment